ஓலா நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி ஆட்டோ- டாக்சி டிரைவர்கள் ஊர்வலம்


ஓலா நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி ஆட்டோ- டாக்சி டிரைவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஓலா நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி ஆட்டோ- டாக்சி டிரைவர்கள் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையம் பகுதியில் ஓலா நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள், டாக்சி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அவர்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆட்டோ டிரைவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் ஏழை, எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கின்ற ஓலா நிறுவனத்தை அனுமதிக்கக்கூடாது. தஞ்சை மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளோடு பேசி நியாயமான கட்டணம் நிர்ணயித்து ஆட்டோ, டாக்சி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கோரிக்கை பேரணி நடத்தப்போவதாக தஞ்சை அனைத்து ஆட்டோ, டாக்சி தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தன.

ஊர்வலம்

அதன்படி தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் தஞ்சை ராசாமிராசுதார் மருத்துவமனை சாலை, அண்ணாசிலை வழியாக பனகல் கட்டிடத்தை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் அனைத்து தொழிற்சங்கத்தினர், ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், 50-க்கும் மேற்பட்ட டாக்சிகளும் பங்கேற்றன. ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் உர்வலத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story