பயிர் காப்பீடு திட்டத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் உறுதி


பயிர் காப்பீடு திட்டத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் உறுதி
x
தினத்தந்தி 25 Jan 2018 4:15 AM IST (Updated: 25 Jan 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீடு திட்டத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை துணை இணை இயக்குனர் செல்வராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) முத்துஎழில், உதவி கலெக்டர்கள் பிரசாந்த், கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பலர் கூட்ட அரங்கின் முன்பகுதியில் தரையில் அமர்ந்து இருந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை பொங்கலுக்கு முன்பு தருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

நெல் கொள்முதல் நிலையம்

தொடர்ந்து விவசாயிகள் பேசும் போது, ‘நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். ஒரு கிலோ ரூ.5-க்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த மாதம் அறுவடை நடக்க உள்ளதால் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இன்சூரன்சு நிறுவன அதிகாரிகளை வைத்து விளக்கம் கூற வைப்பது சரியாக இருக்காது. கடந்த 2008-ம் ஆண்டு கீழஈரால் பகுதியில் சுமார் 70 பேருக்கு ரூ.8 லட்சம் வரை இழப்பீடு தொகை வந்தது. ஆனால் அதனை பெறுவதற்கு ஆட்கள் யாரும் இல்லை. அதே போன்ற நிலை தற்போதும் வரலாம். ஆகையால் தவறு செய்த கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கடம்பூர், ஓனமாக்குளத்தை சேர்ந்த விவசாயிகள், வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் வெள்ளை சரள் மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நடவடிக்கை

பின்னர் பயிர் காப்பீடு தொகை குறித்து நியூ இந்தியா இன்சூரன்சு நிறுவன அதிகாரி அன்பரசு பேசும் போது, ‘தூத்துக்குடி மாவட்டத்தில் கம்பு, மக்காச்சோளம், பயறு வகைகள் மகசூல் அறிக்கை பெறப்பட்டது. அதனை ஆய்வு செய்த போது, சில பகுதிகளில் விவசாயிகள் எண்ணிக்கையில் சில வித்தியாசங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் உண்மையான விவசாயிகளுக்கு காப்பீடு தொகை சென்றடைய வேண்டும் என்ற வகையில், உரிய ஆய்வு நடத்தி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை முடிக்க காலஅவகாசம் தேவை. ஒரு மாதத்துக்குள் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கலெக்டர் வெங்கடேஷ்

கலெக்டர் வெங்கடேஷ் கூறும் போது, ‘2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையில் எந்த பகுதியில் வித்தியாசங்கள் உள்ளதோ, அதனை மட்டும் மீண்டும் ஆய்வு செய்யவும், மற்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு உடனடியாக காப்பீடு தொகை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காப்பீடு தொகை எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்குவதற்காக மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரி வரவழைக்கப்பட்டார். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். கூட்டத்தில் தொடர்ந்து பயிர் காப்பீடு தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினர். இதனால் மற்ற விவசாயிகள், தங்கள் கோரிக்கையை தெரிவிக்க முடியாமல் தவித்தனர். பின்னர் அந்த விவசாயிகள் கோரிக்கையை மனுவாக கலெக்டரிடம் கொடுத்தனர். 

Next Story