ஓட்டல் ஊழியரை கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு


ஓட்டல் ஊழியரை கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Jan 2018 3:15 AM IST (Updated: 26 Jan 2018 12:03 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல் ஊழியரை கொலை செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

விருதுநகர்,

அருப்புக்கோட்டையில் விருதுநகர் சாலையில் சினிமா தியேட்டர் அருகே சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சொக்கலிங்கம்(வயது 60) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 23.5.2013 அன்று அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜா(42) என்பவர் அந்த ஓட்டலுக்கு சென்றார்.

ராஜா, ஓட்டல் ஊழியர் சொக்கலிங்கத்திடம் புரோட்டா பார்சல் கட்டுமாறு கூறினார். அதற்கு சற்று தாமதமாகவே ராஜாவுக்கும், சொக்கலிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சொக்கலிங்கம், ராஜாவை ஓட்டலை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். வெளியே சென்ற ராஜா, தனது தம்பி சரவணன்(35) என்பவருடன் மீண்டும் ஓட்டலுக்கு வந்தார். அங்கிருந்த ஓட்டல் ஊழியர் சொக்கலிங்கத்திடம் 2 பேரும் தகராறு செய்து, அவரை கத்தியால் குத்தினர். இதனை தடுக்க வந்த சுரேஷ் என்பவரையும் அவர்கள் அரிவாளால் வெட்டினர். கத்திக்குத்தியதில் ஓட்டல் ஊழியர் சொக்கலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ராஜா மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்து, விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் வழக்கின் விசாரணை விருதுநகர் கோர்ட்டில் நீதிபதி முருகேசன் முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ராஜா, அவரது தம்பி சரவணன் ஆகிய 2 பேருக்கும் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் கொலை முயற்சி செய்ததற்காக 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

Next Story