12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 6 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 6 இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 Jan 2018 4:00 AM IST (Updated: 26 Jan 2018 12:05 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாத்தூர்,

தி.மு.க., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், பொது வினியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நேற்று விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் தி.மு.க., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

விருதுநகரில் பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதாக 59 பேர் கைது செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டையில் 61 பேரும், சாத்தூரில் 74 பேரும், சிவகாசியில் 109 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 101 பேரும், ராஜபாளையத்தில 52 பேரும் என மொத்தம் 47 பெண்கள் உள்பட 456 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி விருதுநகர் பழைய பஸ் நிலைய தென்புற வாசலில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் ஜெயராஜ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் திலகபாமா கலந்து கொண்டு பேசியதுடன், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். 

Next Story