டென்னிஸ் மைதானத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்
கொரட்டூரில் உள்ள மாநகராட்சி டென்னிஸ் மைதானத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பத்தூர்,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில் மொத்தம் 4 விளையாட்டு மைதானங்கள் மட்டுமே உள்ளன. இதில் கொரட்டூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 2–வது தெரு, பாடி இளங்கோ நகர் மற்றும் முகப்பேர் ஏரித்திட்டம் அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.
மேலும் இங்குள்ள உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சாதனங்களும் உடைந்து துருப்பிடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே விளையாட்டு மைதானங்களை பராமரிக்கவும், உடைந்த விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பத்தூரில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை முறையிட்டனர். ஆனால் போதிய நிதி இல்லாத நிலையில் மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அம்பத்தூர் மண்டல பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.46 லட்சத்தில் கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஒரு டென்னிஸ் மைதானம் கட்டப்பட்டு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் திறக்கப்பட்டது.
அம்பத்தூர் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைந்த இந்த டென்னிஸ் மைதானத்தை சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதான பராமரிப்பு அதிகாரிகள் தனியார் நடத்தும் ஒரு டென்னிஸ் அகாடமிக்கு விளையாட்டு பயிற்சிக்கு அளித்து விட்டதாக தெரிகிறது. அவர்கள் இங்கு டென்னிஸ் பயிற்சி பெற மாதம் ரூ.2,000 கட்டணமாக நிர்ணயித்து உள்ளனர்.
இதனால் இப்பகுதியில் வசிக்கும் டென்னிஸ் ஆர்வம் உள்ள ஏழை மாணவர்கள், பணம் செலுத்த முடியாத விளையாட்டு ஆர்வலர்கள் இந்த டென்னிஸ் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அனைவரும் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ இந்த டென்னிஸ் மைதானத்தை பயன்படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.