மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டம்


மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jan 2018 3:45 AM IST (Updated: 26 Jan 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

ஈரோடு,

மத்திய தொழிற்சங்கங்களான ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப்., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யு., எம்.எல்.எப்., எல்.எல்.எப் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் எஸ்.சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்டம் முழுவதும் இருந்து தொழிற்சங்கத்தினர் ஏராளமானவர்கள் கைகளில் கொடிகளை ஏந்தியபடி மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் கூறும்போது, ‘மத்திய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக நடந்து வருகிறது. மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தி கொண்டே இருக்கிறது. குறிப்பாக விலைவாசி உயர்ந்து வருகிறது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்களை செயலிழக்க செய்யக்கூடாது. அமைப்பு தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் தேசிய சட்டம் மற்றும் நிதியம் உருவாக்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும் மறியல் போராட்டம் நடத்துகிறோம்’ என்றார்.

சுவஸ்திக் கார்னர் பகுதியில் கூடி தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து பஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தினார்கள். எனவே அவர்கள் சுவஸ்திக் கார்னர் பகுதியிலேயே தரையில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், முருகையன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சாலை மறியலை கைவிட்டு அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் தொ.மு.க. மாவட்ட கவுன்சில் தலைவர் வீ.கொளந்தசாமி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் தங்கராஜு, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயலாளர் ஏ.கோவிந்தராஜ், எம்.எல்.எப். மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.காளியப்பன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 

Next Story