மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் 150 பேர் கைது


மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் 150 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 4:30 AM IST (Updated: 26 Jan 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் நேற்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்டதாக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வேலூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சமவேலைக்கு சமஊதியம், பொதுவினியோக முறையை பலப்படுத்தி அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு உள்பட அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பீடி தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும், மாதம் ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பி, புதிய பணியிடங்களை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணைசெயலாளர் சிம்புதேவன், தொ.மு.ச. பேரவை தலைவர் சுப்பிரமணியன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் மறியல் செய்யவிடாமல் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். மொத்தம் 150 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

Next Story