தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 26 Jan 2018 4:30 AM IST (Updated: 26 Jan 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கெலமங்கலம் செல்லும் சாலையில் அச்செட்டிப்பள்ளியில் எப்.ஐ.இ.எம். என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்குரிய முகப்பு விளக்குகள், சாலையில் செல்லும் போது திரும்ப ஒளிரவிடப்படும் விளக்குகள் (இன்டிகேட்டர் லைட்டுகள்) ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஓசூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம் போல வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது காலை 11 மணிக்கு திடீரென்று விளக்குகள் தயாரிக்க கூடிய இடத்தில் தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென்று வேகமாக தொழிற்சாலையில் பல்வேறு இடங்களுக்கு பரவியது. இதனால் தொழிலாளர்கள் உடனடியாக நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்கள். மேலும் ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் ஓசூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அந்த நேரம் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. மேலும் அந்த பகுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு புகை மூட்டமாக காணப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடியும் தீ கட்டுக்குள் வரவில்லை. இதனால் அருகில் உள்ள கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, உதவி அலுவலர் அண்ணாதுரை, ஓசூர் நிலைய அலுவலர் ஜெய்சங்கர் உள்பட 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதே போல தனியார் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜேந்திரன், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசோமசுந்தரம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். நேற்று இரவு வரையில் தீ அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ஆனாலும் தீயை அணைக்க முடியவில்லை.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே சேதத்தின் மதிப்பு முழுமையாக தெரிய வரும் என்றும், தற்போது ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஐ.என்.டி.யு.சி. தேசிய அமைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன், மாவட்ட துணைத்தலைவர் முனிராஜ் உள்ளிட்டோர் தீ விபத்து நடைபெற்ற தொழிற்சாலைக்கு வந்தனர்.

இது குறித்து கே.ஏ.மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழில் நகரமான ஓசூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இங்குள்ள தீயணைப்பு நிலையத்துக்கு கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வழங்க வேண்டும். மேலும் கூடுதல் தீயணைப்பு வீரர்களை நியமிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு நுரை கலவை ஊர்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story