உதயநிதி ஸ்டாலின் கட்சி பணியாற்ற வரட்டும் கனிமொழி எம்.பி. பேட்டி


உதயநிதி ஸ்டாலின் கட்சி பணியாற்ற வரட்டும் கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 26 Jan 2018 4:30 AM IST (Updated: 26 Jan 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

உதயநிதி ஸ்டாலின் கட்சி பணியாற்ற வரட்டும் என கனிமொழி எம்.பி. கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் தி.மு.க. மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முல்லைமுபாரக் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. ரகுபதி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உரிமைகளை கூட காப்பாற்ற முடியாத நிலையில் தமிழக அரசு பதவியை காப்பாற்ற பாடுபடுகிறது. சிவகாசி பட்டாசு, விவசாயிகள், மாணவர்கள் என பலதரப்பட்ட பிரச்சினைகளை கூட கண்டு கொள்ளாத அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் ஊர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா?. குட்கா விற்பனை விவகாரத்தில் புகாருக்கு உள்ளானவர்.

தனியார் பஸ்கள் லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போது, அரசு போக்குவரத்துத்துறை மட்டும் நஷ்டத்தில் செயல்படுவது ஏன். சிறந்த பஸ்களை வைத்து கொண்டு, பஸ் கட்டணத்தை உயர்த்தலாம். ஆனால் தமிழகத்தில் ஓடும் பஸ்களில் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மட்டும் பயணிக்கும் வகையில் உள்ளது. சில பஸ்களில் படிக்கட்டுகள் இல்லை.

பொதுமக்களின் நலனுக்காக தான் கருணாநிதி பஸ்களை அரசுடமை ஆக்கினார். ஆனால் அ.தி.மு.க அரசு அதனை உணரவில்லை. ஒரே நாளில் பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பலர் பாதிப்புக்குள்ளாகி போராட்டத்தில் இறங்கினால் அவர்கள் மீது வழக்கு தொடர்கிறார்கள். இது என்ன நியாயம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தி.மு.க மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழர்கள் தாயாகவும் உயிராகவும் நினைக்கின்றனர். இதனை மதிக்காமல் விஜயேந்திரர் அமர்ந்திருந்தது கண்டிக்கத்தக்கது. தேசிய கீதத்தின் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தும் போது தமிழ்த்தாய் வாழ்த்தின் போது தியானம் இருந்ததாக கூறும் விளக்கம் வருத்தம் அளிக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியலில் வருவதற்கு ஆர்வமாக இருந்தால் கட்சி பணியாற்ற வரட்டும். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மகளிர் அணியில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story