12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய 80 பேர் கைது


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய 80 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2018 4:30 AM IST (Updated: 26 Jan 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்துவதற்காக சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., தொழிலாளர் முன்னேற்ற சங்கம், எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் நேற்று கூடினர். பின்னர், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும், மாணவர்களின் கல்விக்கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் அழகர்சாமி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் தலைமையில் தொழிற்சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் தேவராஜ் உள்பட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். மறியலில் ஈடுபட்டதாக எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் தியாகராஜன் மற்றும் அகஸ்டின், சுகுமாறன், பழனிசாமி, ஜெயராமன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த மறியல் போராட்டம் தொடர்பாக தொழிற்சங்கத்தினர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story