சாலை மறியல்; பஸ்கள் சிறைபிடிப்பு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் 195 பேர் கைது
பஸ் கட்டண உயர்வை கண்டித்து புதுவையில் பா.ஜ.க., இந்திய மாணவர் சங்கத்தினர் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 195 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், உயர்த்தப்பட்ட பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவை பஸ் நிலையம் முன்பு நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் பொதுசெயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் செல்வகணபதி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் செல்வம், சோமசுந்தரம், ஏம்பலம்.செல்வம், துரைகணேசன், நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். பஸ்நிலைய நுழை வாயில் முன்பு அமர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியவில்லை. அப்போது அவர்கள் புதுவை மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிட மறுத்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதிய பஸ்நிலையம் அருகே நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாணவர் சங்க தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். போராட்டத்தில் செயலாளர் பாபு, துணைத்தலைவர் விண்ணரசன், துணை செயலாளர் கவியரசன், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், செந்தமிழ் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 95 பேர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கரிக்குடோன் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறிது நேரத்துக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் நேராக லாஸ்பேட்டை பகுதிக்கு சென்றனர். இதனிடையே, தாகூர் கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். அவர்கள் லாஸ்பேட்டை நாவலர் பள்ளி அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.