குடிநீர் மேல்நிலைதொட்டி மீது ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்


குடிநீர் மேல்நிலைதொட்டி மீது ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 26 Jan 2018 5:13 AM IST (Updated: 26 Jan 2018 5:13 AM IST)
t-max-icont-min-icon

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குடிநீர் மேல்நிலைதொட்டி மீது ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். கூலி தொழிலாளி. இவருடைய மகள் சகிலா (வயது 30). இவர் நேற்று காலை 7 மணியளவில் பச்சனம்பட்டியில் உள்ள குடிநீர் மேல்நிலைதொட்டி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சகிலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சகிலா குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கினார். அப்போது சகிலா தன்னை காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். அதற்கு, கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது போலீசாரிடம் சகிலா கூறியதாவது:-

நானும் பாகல்பட்டி ஊராட்சி பூமிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சீனிவாசன் (33) என்பவரும் காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம். சீனிவாசன் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக உள்ளார். இருவரும் கணவன்-மனைவியாக வசித்து வந்தோம். சீனிவாசன் வீட்டுக்கும் நாங்கள் திருமணம் செய்து கொண்டது தெரியாது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீனிவாசனுக்கு விபத்து ஏற்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதை அறிந்து சீனிவாசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று சீனிவாசனை பார்த்து விட்டு சிகிச்சை முடிந்த பின்னர் அவரை பூமிநாயக்கன்பட்டிக்கு அழைத்து வந்து விட்டனர். அப்போது என்னை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு போய் விட்டார்கள்.

சென்னையில் தனியாக வசித்து வந்த நான் பூமிநாயக்கன்பட்டிக்கு வந்தேன். அங்கு சீனிவாசனின் பெற்றோர் ஜெயராமன், அலமேலு மற்றும் அவருடைய அக்காள்கள் லோகேஸ்வரி, தமிழ்செல்வி, அக்காள் கணவர் வேலு, அத்தை அலமேலு ஆகியோர் என் வீட்டுக்கு வந்து முறைப்படி பேசி அழைத்து செல்வதாக கூறினார்கள். அதன்பின்னர் இரண்டு, மூன்று முறை சென்றபோது என் கணவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் என் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்றேன். அப்போது எனது தாலியை பறித்துக் கொண்டு தாக்கினர். இதனால் மனமுடைந்த நான் மேல்நிலை தொட்டி மீது ஏறினேன். இவ்வாறு போலீசாரிடம் சகிலா கூறி உள்ளார்.

இதுபற்றி சகிலா ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story