கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை அமைப்பதே எங்களது நோக்கம் அமித்ஷா பேச்சு


கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை அமைப்பதே எங்களது நோக்கம் அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 26 Jan 2018 5:46 AM IST (Updated: 26 Jan 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

ஊழலை ஒழித்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைப்பதே எங்களது நோக்கம் என்று மைசூருவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

மைசூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மாநிலம் முழுவதும் பரிவர்த்தனா யாத்திரை என்னும் மாற்றத்திற்கான பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் மைசூருவில் நேற்று பா.ஜனதா சார்பில் மாற்றத்திற்கான பயணம் நடந்தது. இதையொட்டி எடியூரப்பா பிரசார வாகனத்தில் ஊர்வலமாக வந்தார்.

பின்னர் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தனி விமானத்தில் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கூட்டம் நடந்த மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கூட்டத்தை அவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பின்னர் அமித்ஷா பேசியதாவது:–

கர்நாடகத்தில் மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பரிவர்த்தனா யாத்திரை என்னும் பெயரில் மாற்றத்திற்கான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பயணத்தின் மூலம் எடியூரப்பா 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எடியூரப்பா நடத்திய சுற்றுப்பயணம் வெற்றி அடைந்துள்ளது. இதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். பா.ஜனதா சார்பில் கர்நாடகத்தில் நடத்தப்படும் மாற்றத்திற்கான பயணம் என்பது, அரசையும், முதல்–மந்திரியையும் மாற்றம் செய்வதற்கான பயணம் அல்ல.

மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகள், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் நிலைமைகள் உள்ளிட்டவற்றை தீர்த்து, வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே இந்த மாற்றத்திற்கான பயணம். இந்த மாற்றத்திற்கான பயணத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், காங்கிரஸ் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

கர்நாடகத்தில் பா.ஜனதாவில் பிளவு ஏற்படுத்தி விடலாம் என காங்கிரசார் பகல் கனவு காண்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. பா.ஜனதாவை உடைக்க எந்த சக்தியாலும் முடியாது. மைசூருவில் இன்று (அதாவது நேற்று) நடக்கும் பொதுக்கூட்டத்தை சீர்குலைக்கவே ஆளும் காங்கிரஸ் அரசின் தூண்டுதலின் பேரில் கர்நாடகத்தில் மகதாயி பிரச்சினையில் மாநிலம் தழுவிய முழுஅடைப்பு நடத்தப்பட்டு உள்ளது. அதேப் போல் பெங்களூருவில் பிப்ரவரி 4–ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அந்த கூட்டத்தில் பா.ஜனதாவினர் கலந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் ஆளும் கட்சியினர் உதவியுடன் அன்றைய தினம் பெங்களூருவில் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற போராட்டத்தால் நாங்கள் அஞ்சமாட்டோம். எப்படி இருந்தாலும் பெங்களூருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிகளவில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். எடியூரப்பா தான் முதல்–மந்திரியாக பதவி ஏற்பார். கர்நாடக மாநிலத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளை, தற்போதை மாநில அரசு பாக்ய திட்டங்களை நிறைவேற்ற பயன்படுத்தி வருகிறது. சாமுண்டீசுவரி அம்மன் குடிகொண்ட நகரம் மைசூரு. மகிஷாசூரனை வதம் செய்த சாமுண்டீசுவரி ஆட்சி செய்யும் இந்த மாநிலத்தில் நமக்கு அந்நியாயம் நிகழாது.

கர்நாடகத்தில் தற்போது ஊழல், முறைகேடுகள் நிறைந்த அரசு ஆட்சியில் உள்ளது. ஊழல்வாதி, அகம்பாவம் நிறைந்த சித்தராமையா முதல்–மந்திரியாக இருக்கிறார். தன்னை சாமானிய மனிதன் எனக் கூறும் சித்தராமையா ரூ.70 லட்சம் கைக்கெடிகாரம் கட்டிக் கொண்டு திரிந்துள்ளார். அர்க்காவதி லே–அவுட் நிலவிடுவிப்பில் அவர் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளார். அதேப் போல் கனிம சுரங்கம் நடத்தியதிலும் ஏராளமான கோடி ரூபாய் முறைகேடு நடத்தி இருக்கிறார். ஊழல் என்றால் சித்தராமையா. சித்தராமையா என்றால் ஊழல் என்ற நிலைமை தான் இங்கு உள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 20–க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ. ஆகிய அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது. ஆனால் அதனை கர்நாடக காங்கிரஸ் அரசு மூடி மறைத்து வருகிறது. மேலும் இந்து அமைப்பினர் மீது பொய் வழக்குகளும் போடப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்ததும், இந்து அமைப்பினர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் புதைகுழியில் பதுங்கியிருந்தாலும் அவர்களை இழுத்து வந்து வழக்குப்பதிவு செய்யப்படும்.

மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. ஊழலில் திளைக்கும் கர்நாடகத்தில் ஊழலை ஒழித்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியமாக உள்ளது. இது பா.ஜனதா ஆட்சி அமைந்தால் தான் சாத்தியமாகும். எனவே தான் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை அமைப்பதே எங்களது நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story