அன்னூர் அருகே வீடு புகுந்து பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை


அன்னூர் அருகே வீடு புகுந்து பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 Jan 2018 4:15 AM IST (Updated: 26 Jan 2018 11:52 PM IST)
t-max-icont-min-icon

அன்னூர் அருகே பெண்ணை கொலை செய்து நகை, பணத்தை வடமாநில தொழிலாளிகள் கொள்ளையடித்தனர்.

அன்னூர்,

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கணுவக்கரை ஊஞ்சக்குட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 58), விவசாயி. அவருடைய மனைவி ராஜாமணி (53). இவர்களுடைய மகள்கள் சுகன்யா (20), ஜனனி (18).

இதில், சுகன்யா கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜனனி தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அக்காள்- தங்கை இருவரும் தனித்தனியாக கோவையில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளனர்.

மயில்சாமி தனது தோட்டம் அருகே புதிய வீடு கட்டி வருகிறார். புதிய வீட்டில் தற்போது கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வடமாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் திருப்பூரில் இருந்து வந்து மயில்சாமியின் தோட்டத்திலேயே 5 நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிரானைட் கற்கள் பதிக்கும் பணியை முடித்து விட்டு 3 பேரும் தோட்டத்தில் தங்கினர். மயில்சாமியும், அவரது மனைவி ராஜாமணியும் தங்கள் வீட்டில் தூங்க சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் மயில்சாமி வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து மயில்சாமி கதவை திறந்தார்.

அப்போது வீட்டுக்கு வெளியே தனது தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 3 பேரும் நின்று இருந்தனர். அவர்களிடம் மயில்சாமி, என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். இதையடுத்து தண்ணீர் எடுத்து வர மயில்சாமி வீட்டுக்குள் சென்றார்.

அவரை பின்தொடர்ந்து 3 பேரும் வீட்டுக்குள் சென்று மயில்சாமியை உருட்டு கட்டையால் தலையில் பலமாக தாக்கினர். அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அந்த 3 பேரும் தாங்கள் கொண்டு வந்த ஒயரை அங்குள்ள மின்இணைப்பில் கொடுத்து மயில்சாமி மீது மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல முயன்றனர். உடனே மயில்சாமி மயங்கி விழுந்தார். இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்து வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

கணவரின் சத்தம் கேட்டு அறையில் தூங்கி கொண்டு இருந்த ராஜாமணி எழுந்து ஓடிவந்தார். அங்கு வடமாநில தொழிலாளர்கள் 3 பேரும் உருட்டுக்கட்டையுடன் நின்று கொண்டு இருந்தனர். மேலும் கீழே கணவர் கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜாமணி சத்தம்போட்டார். மேலும் மயில்சாமியை காப்பாற்ற ஓடிச்சென்றார். ஆனால் அதற்குள் தொழிலாளர்கள் 3 பேரும் ராஜாமணியின் முகத்தில் பூரி கட்டையால் தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் 3 பேரும் ராஜாமணியை புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு தூக்கி சென்றனர். அப்போது அவர் மயக்கம் தெளிந்து எழுந்ததாக தெரிகிறது. இதனால் அவரை உயிருடன் விட்டால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி 3 பேரும் சேர்ந்து ராஜாமணியை கழுத்தை கயிற்றால் இறுக்கினர். இதில் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.பின்னர் வடமாநில தொழிலாளர்கள் 3 பேரும் ராஜாமணி காதில் அணிந்திருந்த 1½ பவுன் கம்மலை பறித்து விட்டு அவருடைய உடலை சாக்கு பையில் வைத்து கட்டினர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் மயில்சாமி வீட்டுக்கு சென்று பீரோவில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரம் கழித்து மயில்சாமி மயக்கம் தெளிந்து எழுந்தார். அவர் வீட்டுக்குள் சென்று ராஜாமணியை தேடி னார். அவரை காணவில்லை. உடனே அவர் தட்டுதடுமாறி வீட்டை விட்டு வெளியே வந்து பக்கத்து தோட்டத்துக்கு சென்று தொழிலாளர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் அன்னூரில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வீட்டை சோதனை செய்தபோது புதிதாக கட்டி வரும் வீட்டுக்குள் ராஜாமணி சாக்குமூட்டையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தை கோவை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு மூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமோகன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் கொலை நடந்த இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மயில்சாமி வீடு கட்டுவதற்காக பணம் வைத்து இருந்ததையும், அவரது மனைவி நகைகள் அணிந்து இருந்ததை பார்த்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை நடத்தியது தெரியவந்துள்ளது.

கோவையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கியிருந்த சுகன்யா மற்றும் ஜனனி ஆகியோருக்கு ராஜாமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அலறியடித்தபடி வந்த அவர்கள் தங்களது தாயின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.

இந்த கொலை, கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளியை கண்டுபிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்- இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தனிப்படை போலீசார் அவினாசி, சத்தி, கோபி, திருப்பூர், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story