பஸ் கட்டண உயர்வால் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது


பஸ் கட்டண உயர்வால் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது
x
தினத்தந்தி 27 Jan 2018 4:00 AM IST (Updated: 26 Jan 2018 11:52 PM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வால் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. அதேபோல வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மதுரை,

தமிழக அரசு கடந்த 20-ந் தேதி முதல் பஸ் கட்டணத்தை 100 சதவீத அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பஸ் பயணத்தையே மறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் பல மடங்கு குறைவாக உள்ளதால், பலரும் ரெயில் பயணத்திற்குத் தாவி விட்டனர். இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்து, ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. ரெயில்வேயின் வருமானமும் கடந்த 20-ந் தேதி முதல் அதிகரித்து வருகிறது.

மதுரை கோட்ட ரெயில்வேயின் வருமான அதிகரிப்பு பற்றி, கோட்ட மேலாளர் நீனு இட்டியேரா கூறியதாவது:-

மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட ஏ-1, ஏ, பி பிரிவு ரெயில் நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்துள்ளது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்து 128 பயணிகள் மூலம் ரூ.27 லட்சத்து 8 ஆயிரம் வருமானமாக கிடைக்கும்.

கடந்த 20-ந் தேதி அனைத்து ரெயில் நிலையங்களிலும் சேர்த்து 50 ஆயிரத்து 750 பயணிகள் மூலமாக ரூ.39 லட்சத்து 54 ஆயிரத்து 512 வருமானமாக கிடைத்துள்ளது. அன்றைய தினம் மதுரை ரெயில் நிலையத்தில் மட்டும் 16 ஆயிரத்து 30 பயணிகள் மூலம் ரூ.15 லட்சத்து 74 ஆயிரத்து 600 வருமானமாக கிடைத்துள்ளது. பரமக்குடியில் 173 சதவீதமும், செங்கோட்டையில் 257 சதவீதமும் வருமானம் அதிகரித்துள்ளது.

கடந்த 21-ந் தேதி அனைத்து ரெயில்நிலையங்களிலும் 65 ஆயிரத்து 700 பயணிகள் மூலமாக ரூ.41 லட்சத்து 63 ஆயிரத்து 490 வருமானமாக கிடைத்துள்ளது. இதில் காரைக்குடி ரெயில் நிலையத்தின் வருமானம் 241 சதவீதமும், செங்கோட்டை ரெயில் நிலையத்தின் வருமானம் 214 சதவீதமும் அதிகரித்துள்ளது.

கடந்த 22-ந் தேதி அனைத்து ரெயில் நிலையங்களில் இருந்தும் 73 ஆயிரத்து 172 பயணிகள் மூலமாக ரூ.49 லட்சத்து 91 ஆயிரத்து 250 வருமானமாக கிடைத்துள்ளது.

அதேபோல, வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 50 சீசன் டிக்கெட்டுகள் மூலமாக ரூ.25 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். தற்போது சீசன் டிக்கெட்டுகள் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 20-ந் தேதி மட்டும் சீசன் டிக்கெட் வருமானமாக ரூ.55 ஆயிரத்து 255, 21-ந் தேதி ரூ.36,445, 22-ந் தேதி ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 200 வருமானமாக கிடைத்துள்ளது.

21-ந் தேதி சீசன் டிக்கெட் பயணிகளின் எண்ணிக்கை 506 சதவீதம் உயர்ந்தது.

22-ந் தேதி இது 1550 சதவீதமாக உயர்ந்தது. இதில் மதுரை ரெயில்நிலையத்தில் இருந்து செல்லும் ரெயில்களுக்கு மட்டும் 1,500 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேநேரம் கடந்த 20-ந் தேதி டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.93 ஆயிரத்து 460, 21-ந் தேதி ரூ.92 ஆயிரத்து 420, 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story