ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது, மு.க.ஸ்டாலின் பேட்டி


ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது, மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 27 Jan 2018 4:30 AM IST (Updated: 27 Jan 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாக கடலூரில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கடலூர்,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்பதே உண்மை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் எத்தனை மீனவர்கள் காணாமல் போனார்கள் என்ற புள்ளி விவரத்தை கூட இதுவரை இந்த அரசு வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஒகி புயலால் மாயமான மீனவர்களில் 19 பேர் கதி என்ன? என்று இதுவரை தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை அமைச்சர்களோ, அரசு அதிகாரிகளோ யாரும் வந்து சந்தித்து ஆறுதல் கூட கூறவில்லை.

இந்த நிலையில் கடலூரில் மீனவர்களை இழந்து இருக்கக்கூடிய அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்ற அடிப்படையில், தி.மு.க. சார்பில் இன்று அவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறோம். ஆகவே காணாமல் போன மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று இந்த அரசை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், தி.மு.க. சார்பிலும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மீனவர்களை கடைசி நிமிடம் வரைக்கும் தேடுவோம் என்று கவர்னர் உரையிலேயே குறிப்பிட்ட நிலையில், தற்போது கடைசி வரைக்கும் தேடுவோம் என்ற தவறான தகவலை தான் சொல்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சிதம்பரத்தில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் இப்போதெல்லாம் தியானம் என்பது ரொம்ப மலிவாக போய் விட்டது. அம்மையார் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று சிலர் தியானம் செய்கிறார்கள்.

மத்தியில் உள்ள மோடி அரசு, பணநீக்க மதிப்பு அறிவிப்பை இரவோடு இரவாக வெளியிட்டது போல, தமிழகத்தில் மோடியின் அடிமையாக இருக்கக்கூடிய ஆட்சியும் போக்குவரத்து கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தியிருக்கிறது. அதற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்து போராடி வருகிறார்கள்.

தற்போது கூட குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஏன் பயப்படுகிறீர்கள் என்று இந்த அரசை பார்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளே கூட கேள்விக்கேட்டிருக்கிறார்கள். குட்கா விற்பனையை தடுக்கும் இடத்தில் இருக்கிற காவல்துறை தலைவரான டி.ஜி.பி. ராஜேந்திரன் மாமூல் வாங்கி இருக்கிறார் என்று வருமானவரித்துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது. ஒரு அமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று ஆதாரங்களோடு செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

ஆகவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று திமு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், குட்கா வழக்கை சி.பி.ஐ. தான் விசாரிக்க போகிறது என்ற தீர்ப்பு விரைவில் வரப்போகிறது. அப்படி தீர்ப்பு வரக்கூடிய நேரத்தில் குற்றவாளிகள் அனைவரும் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இந்த கொடுமைக்கு துணை நிற்கிறார்கள் என்று சொன்னால் இந்த நாட்டை எப்படி நாம் காப்பாற்றிட முடியும். ஆகவே இந்த நாட்டை காப்பாற்ற எந்த தியாகத்துக்கும் உங்களை உட்படுத்திக்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story