திருமண ஆசை காட்டி பணம் மோசடி: ஸ்காட்லாந்தில் படிக்க நடிகை சுருதி ரூ.45 லட்சம் செலுத்தினார், போலீஸ் விசாரணையில் தகவல்


திருமண ஆசை காட்டி பணம் மோசடி: ஸ்காட்லாந்தில் படிக்க நடிகை சுருதி ரூ.45 லட்சம் செலுத்தினார், போலீஸ் விசாரணையில் தகவல்
x
தினத்தந்தி 27 Jan 2018 4:45 AM IST (Updated: 27 Jan 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருமண ஆசை காட்டி என்ஜினீயர்களிடம் மோசடி செய்த பணத்தில் நடிகை சுருதி ஸ்காட்லாந்து நாட்டு பல்கலைக்கழகத்தில் படிக்க ரூ.45 லட்சம் செலுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் ‘ஆடி போனா ஆவணி’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார். ஆனால் அந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை சுருதி திருமண ஆசைகாட்டி பல கோடி ரூபாய் மோசடி செய்தார்.

இதுதொடர்பாக பால முருகன் என்பவர் அளித்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் சினிமா நடிகை சுருதி, அவருடைய தாய் சித்ரா(48), சுபாஷ்(19), வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் (41) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களை தனிப்படை போலீசார் கடந்த 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்து அவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

7 நாள் போலீஸ் விசாரணையின் போது நடிகை சுருதி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடலூரை சேர்ந்தவர் நடிகை சுருதி (வயது 21). இவர் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பின்னர் 11-ம் வகுப்பு கோவையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். ஆனால் அவர் 12-ம் வகுப்பு முழுமையாக படிக்க வில்லை. தனது கல்வி சான்றிதழில் தந்தையின் பெயரை பிரசன்ன வெங்கடேஷ் என்று அவர் போலியாக மாற்றியுள்ளார். பிரசன்ன வெங்கடேஷ் வளர்ப்பு தந்தை ஆவார். அவரது உண்மையான தந்தை பெயர் விவரம் தெரியவில்லை.

கைது செய்யப்பட்டுள்ள சுருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேரும் குடும்பமாக ஒன்று சேர்ந்து வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் வாலிபர்களை குறி வைத்து ஏமாற்றியுள்ளனர். முதலில் சுருதியின் புகைப்படங்களை போலியான பெயரில் திருமண இணையதளத்தில் மணமகன் தேவை என்று பதிவு செய்வார்கள்.

அதை பார்த்து விருப்பம் தெரிவிக்கும் குடும்பங்களை இவர்கள் தொடர்பு கொண்டு அருகில் உள்ள கோவிலில் பெண் பார்க்கும் படலம் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிப்பார்கள். அங்கு செல்வ தற்கு முன்பு சுருதியை மாப்பிள்ளையிடம் அவரது தாயார் செல்போனில் பேச வைத்து தனியாக சந்திக்க ஏற்பாடு செய்வார்.

அப்போது வாலிபர்கள் தன்னை தொடக் கூட சுருதி அனுமதிக்க மாட்டார். மேலும் சுருதியை புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவிக்கும் வாலிபர்களிடம் தன் உடலில் காமிரா பிளாஷ் பட்டால் அலர்ஜி வந்து விடும். எனவே போட்டோ வேண்டாம் என்று சுருதி ஒதுங்கிக் கொள்வார். சுருதி தன்னுடன் யாரையும் பக்கத்தில் நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டார். அதற்கு சுருதி கூறும் காரணம் தன்னை திருமணத்துக்கு முன்பு வேறு ஒரு ஆணுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை தனது தாயார் விரும்ப மாட்டார் என்று கூறுவார். இதையெல்லாம் பார்க்கும் வாலிபர்கள் பெண் மிகுந்த ஒழுக்கம் உள்ளவள் என்று நினைத்துக் கொள்வார்கள்.

கோவிலில் பெண் பார்க்கும் படலம் முடிந்ததும் மாப்பிள்ளையை தனியாக சந்தித்து அவரை அங்குள்ள நகைக் கடைக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை பேசி விலை உயர்ந்த எடை அதிகமுள்ள தங்க நகையை எடுத்து அணிந்து கொண்டு நாம் சந்தித்த முதல் சந்திப்பிற்கு இதை பரிசாக வைத்துக் கொள்கிறேன் என்று மாப்பிள்ளை செலவில் நகைகளை சுருதி வாங்கிக் கொள்வார்.

வாலிபர்களிடம் பணம் மற்றும் நகைகளை சுருதி கேட்டு பெறுவது அந்த வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தெரியாது. சில வாலிபர்களிடம் வெளிநாடுகளில் படிப்பதற்கு பணம் வேண்டுமென்று லட்சக்கணக்கில் ஏமாற்றி பணம் கறந்துள்ளார். பணத்தை திருப்பி கேட்கும் பலரையும் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்து விடுவேன் என்றும் சுருதி மிரட்டியுள்ளார். இதனால் பணத்தை இழந்த வாலிபர்கள் அது பற்றி வெளியே சொல்லாமலேயே இருந்து வந்துள்ளனர்.

அந்த பணத்தில் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 9.2.2017 முதல் 17.12.2017 வரை ‘அறிவியலில் பவுண்டேசன் சான்றிதழ்’ பெறுவதற்கான ஒரு ஆண்டு படிப்பிற்காக ரூ.10 லட்சத்தை சுருதி செலுத்தியுள்ளார். மேலும் அதே பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி இயற்பியல் மற்றும் வான் இயற்பியல் என்ற 3 ஆண்டு படிப்பிற்காக வங்கி மூலம் ரூ.35 லட்சம் செலுத்தியுள்ளார். இதன்படி மோசடி பணத்தில் ஸ்காட்லாந்தில் படிக்க ரூ.45 லட்சத்தை சுருதி செலுத்தியுள்ளார்.

ஆனால் அவர் பிளஸ்-2 முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்கும்போது அவர் எதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார் என்று தெரியவில்லை.

நடிகை சுருதி திருமண ஆசை காட்டி மோசடி செய்த வாலிபர்களிடமிருந்து பறித்த பணத்தில் 62 பவுன் தங்க நகைகள், வைர கற்கள் பதித்த தங்க நகைகளையும் வாங்கியுள்ளார். மேலும் மியூச்சுவல் பண்டில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். விமான டிக்கெட்டுக்காக ரூ. ஒரு லட்சத்து 32 ஆயிரமும், ஓட்டலில் தங்கிய செலவு, செல்போன் ரீசார்ஜ் செலவு போக மீதி பணம் ரூ. 18 லட்சத்து 79 ஆயிரத்து 62-ஐ சுருதி தனது பெயரில் வெளிநாட்டு வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளார்.

சுருதி கொடுத்த தகவலின்பேரில் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்துக்கு அடமானம் வைத்திருந்தார். அவை பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. இது தவிர அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 38 பவுன் தங்க நகைகள் கைப்பற் றப்பட்டன. வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் மற்றும் தனியார் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள 67 பவுன் நகைகளையும் கைப்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுருதியிடமிருந்து 9 விலை உயர்ந்த செல்போன்கள், ஆப்பிள் ஐ பேடு, ஆப்பிள் மடிகணினி ஆகியவை ஏற்கனவே கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story