திருப்பூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா: 464 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


திருப்பூர் மாவட்டத்தில் குடியரசு தின விழா: 464 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 Jan 2018 5:12 AM IST (Updated: 27 Jan 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. விழாவில் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, 464 பயனாளிகளுக்கு ரூ.41½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. காலை 8.15 மணிக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். ஊர்க்காவல் படையினர், டிராபிக் வார்டன்கள், என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.

பின்னர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அதைத்தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டதுடன், மூவர்ண பலூன்களையும் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பறக்கவிட்டனர்.

அதன்பிறகு திருப்பூர் மாவட்ட காவல்துறையை சேர்ந்த 12 பேருக்கும், மாநகர காவல்துறையை சேர்ந்த 4 பேருக்கும் என மொத்தம் 16 போலீசாருக்கு முதல்- அமைச்சர் பதக்கங்களும், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் 71 பேருக்கும், தீயணைப்புத்துறையை சேர்ந்த 4 பேருக்கும், மாவட்ட காவல்துறையில் 42 பேருக்கும், மாநகர காவல்துறையில் 41 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் முன்னாள் படை வீரர் நலத்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், தொழிலாளர் நல வாரியம், தாட்கோ சார்பில் 464 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சத்து 60 ஆயிரத்து 635 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் மாணவ- மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, துணை கமிஷனர்கள் கயல்விழி, பிரபாகரன், சப்- கலெக்டர்கள் ஷ்ரவன்குமார்(திருப்பூர்), கிரேஸ் பச்சாவு(தாராபுரம்), உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் முகமது இக்பால், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ரங்கசாமி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாதனைக்குறள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், போலீசார், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story