டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குடியரசு தினத்தன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி குடியரசு தினத்தன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2018 5:56 AM IST (Updated: 27 Jan 2018 5:56 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோபியில் குடியரசு தினத்தன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்.

கடத்தூர்,

கோபி வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடியரசு தினமான நேற்று தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏற்றியிருந்தார்கள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கோபி வாய்க்கால் ரோட்டில் டாஸ்மாக் கடை நீண்ட நாட்களாக செயல்பட்டு வருகிறது. மதியம் 12 மணி அளவில் கடை திறக்கும் போது அந்த ரோட்டில் நடப்பதற்கு கூட பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வருகிறது. மேலும், குடிமகன்கள் குடித்து விட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு முன்பு படுத்து தூங்குகிறார்கள்.

டாஸ்மாக் கடையால் அந்த வழியாக கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அருகிலேயே உள்ளது.

எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் மனுக்கள் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பலமுறை போராட்டம் நடத்தி உள்ளனர்.

எனவே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக குடியரசு தினத்தன்று வீடுகளுக்கு முன்பாக கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வீடுகள் முன்பு பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றியிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story