பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும், ஈரோட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி


பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும், ஈரோட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 27 Jan 2018 5:59 AM IST (Updated: 27 Jan 2018 5:59 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று ஈரோட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

ஈரோடு,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஈரோடு திண்டலில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கொ.ம.தே.க. மகளிர் அணி தெற்கு மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர்கள் கலாமணி, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கில் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் அடுத்த தலைமுறையினரை சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும். அதற்கு பெண்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் அனைத்து அமைப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியை தாண்டி செல்கிறது. ஆனால் இதை தமிழக அரசு உணரவில்லை. வருமானத்தை அதிகரிக்க அரசு எந்தவொரு முயற்சியும் செய்யவில்லை. தொழில் வளர்ச்சி, விவசாய உற்பத்தியை பெருக்க மாநில அரசு முன்வரவேண்டும். தமிழக இளைஞர்களின் திறனை பயன்படுத்தி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் கிராமப்புறங்களை முன்னேற்ற முடியாது. எனவே கோர்ட்டு உத்தரவுபடி உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பஸ் கட்டண உயர்வால் மட்டுமே அரசு போக்குவரத்து கழகத்தின் பிரச்சினையை தீர்க்க முடியாது. கட்டணத்தை உயர்த்தாமல் நஷ்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகத்தை மீட்கலாம். அதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அவர்களுடைய ஆலோசனைபடி செயல்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். எனவே பஸ் கட்டண உயர்வு தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற தமிழக அரசு முன்வர வேண்டும்.

மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மீனவர்களை கைது செய்தல், அபராதம் விதித்தல், துப்பாக்கி சூடு நடத்துதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எனவே பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

Next Story