பஸ் கட்டண உயர்வை கண்டித்து வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை முத்துக்கடையில் வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை முத்துக்கடையில் வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து நேற்று காலைஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.என்.உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குண்டா என்ற சார்லஸ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போட்டனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சங்கரன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஆசாத், முஸ்லிம்லீக் கட்சியை சேர்ந்த முகம்மது யூனுஸ், தமிழக விவசாய தொழிலாளர் கட்சியை சேர்ந்த மூர்த்தி உள்பட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.