“அரசு பள்ளியில் படிப்பதை தாழ்வாக நினைக்கக் கூடாது” இஸ்ரோ தலைவர் பேச்சு


“அரசு பள்ளியில் படிப்பதை தாழ்வாக நினைக்கக் கூடாது” இஸ்ரோ தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 28 Jan 2018 4:30 AM IST (Updated: 28 Jan 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் படித்தாலும் சாதனை படைக்கலாம் என்றும், அரசு பள்ளியில் படிப்பதை தாழ்வாக நினைக்கக் கூடாது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளையை சேர்ந்தவர் கே.சிவன். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வந்த இவர், கடந்த 15-ந் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இஸ்ரோ தலைவராக கே.சிவன் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான சரக்கல்விளைக்கு வந்தார். அவருக்கு ஊர்மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவர் கே.சிவனுக்கு, அவர் படித்த இந்து கல்லூரியில் பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பங்கேற்றார். அவருக்கு கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர் மாணவ-மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு பதவி உயர்வு கிடைத்ததும் நான் படித்த இந்து கல்லூரி தான் முதலில் ஞாபகத்துக்கு வந்தது. இதற்கு பிரதான காரணம் உண்டு. பள்ளி படிப்பை முடித்ததும் பல்வேறு கல்லூரிகளில் படிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்து கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று என் தந்தை கூறினார். இந்து கல்லூரிக்கு அருகே எங்களது வயல் இருந்ததால் கல்லூரிக்கு சென்று விட்டு வயலில் வேலை பார்க்கலாம் என்பதற்காக என் தந்தை என்னை இந்து கல்லூரியில் படிக்கும்படி தெரிவித்தார். நான், கல்லூரியில் படித்த பாடங்கள் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது.

கல்லூரியில் படிக்கும் காலங்களில் நான் சிறந்த மாணவன் அல்ல. சாதாரண மற்றும் மந்தபுத்தி கொண்ட மாணவன் தான். ஆனால் கடைசி ஆண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், நான் மேற்படிப்புக்கு செல்ல உதவியாக அமைந்தது. மாணவர்கள், ஆசிரியர் சொல்லி தருபவற்றை கற்றுக்கொண்டு சாதனையாளராக உருவாக வேண்டும். அதோடு நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும்.

வாழ்வில் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் நமக்கு கற்று தந்த ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆசிர்வாதத்தை பெற தவறக்கூடாது.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார். முன்னதாக இந்து கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலை இஸ்ரோ தலைவர் கே.சிவன் திறந்து வைத்தார்.

இதே போல் அவர் படித்த வல்லன்குமாரன்விளை அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அவருக்கு பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் கே.சிவனை பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்தினர். பின்னர் அவர் மாணவ-மாணவிகளிடையே பேசுகையில், ‘மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் படிப்பதை தாழ்வாக நினைக்க கூடாது. கிராம மாணவ-மாணவிகள் தமிழில் படித்தாலும் சாதனை படைக்கலாம். எனவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நன்றாக படித்து சாதனை படைக்க வேண்டும்’ என்றார்.

அதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை இஸ்ரோ தலைவர் கே.சிவன் நட்டார். பின்னர் சொந்த ஊரான சரக்கல்விளையிலும் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. 

Next Story