தஞ்சையில் கேபிள் டி.வி. தாசில்தார் அலுவலகத்தை ஆபரேட்டர்கள் முற்றுகை


தஞ்சையில் கேபிள் டி.வி. தாசில்தார் அலுவலகத்தை ஆபரேட்டர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Jan 2018 4:30 AM IST (Updated: 28 Jan 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் அரசு கேபிள் டிவி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை திலகர்திடல் அருகே காவேரி கூட்டுறவு சிறப்பு அங்காடி உள்ளது. இந்த வளாகத்தில் அரசு கேபிள் டி.வி. தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த அலுவலகத்திற்கு பதிவுசெய்வதற்காக வந்தனர்.

அப்பொழுது அங்கிருந்த அரசு கேபிள் டிவி தாசில்தார் அரசு வினியோகம் செய்யும் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி கேபிள் டிவி ஒளிபரப்பு செய்யப்படும் வீடுகளில் பொருத்த வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆனால் திருவையாறு பகுதிகளில் சில இடங்களில் தனியார்நிறுவனத்தின் செட்டாப்பாக்ஸ்களை வீட்டின் உரிமையாளர்கள் வாங்கி பொறுத்தினர்.

இதையடுத்து திருவையாறு உள்ளிட்ட சில பகுதிக்கு அரசு கேபிள் டி.வி. செட்டாப்பாக்ஸ்களை பொறுத்தி ஒளிபரப்பு செய்வதற்காக மற்றொரு ஆபரேட்டர்களை நியமனம் செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நேற்று தஞ்சை அரசு கேபிள் டி.வி. தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் கேபிள் டி.வி. தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டம் 30 நிமிடம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து தஞ்சை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க தலைவர் குமணன் கூறியதாவது:- தஞ்சை அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் வழங்கப்படும் செட்டாப் பாக்ஸ் தரமானதாக இல்லை. இதனால் ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி வீடுகளில் பொருத்தி வருகிறோம். மேலும் அரசு வழங்கும் செட்டாப்பாக்சில் ரூ.210 மாதந்தோறும் வசூலிப்பதுடன் 300 சேனல்கள் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் தனியார் நிறுவனம் வழங்கும் செட்டாப் பாக்சில் 400 சேனல்கள் கிடைக்கிறது. மாதம் ரூ.160 மட்டுமே. நவீன தொழில்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் எந்த செட்அப் பாக்சை கேட்கிறார்களோ அதை தான் ஆபரேட்டர்கள் பொருத்த முடியும்.

ஆனால் அரசு கேபிள் டிவி தாசில்தார் அரசு செட்டாப்பாக்சை தான் பொருத்த வேண்டும் என்று கூறி அவ்வாறு பொருத்தாத இணைப்புகளை எல்லாம் துண்டிக்கும் செயலில் ஈடுபடுகிறார். மேலும் போட்டியாக ஆபரேட்டர்களை உருவாக்கும் போக்கை அரசு கேபிள் டிவி தாசில்தார் கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஒருநாள் முதல் கட்டமாக அரசு கேபிள் டிவி ஒளிபரப்புகளை நிறுத்தி வைத்துள்ளோம்”என்றார். 

Next Story