பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:30 AM IST (Updated: 28 Jan 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில், தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்காக போடப்பட்டு இருந்த மேடையை போலீசார் அப்புறப்படுத்த முயன்றதால் வாக்குவாதம்-பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நீலமேகம் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், பி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பரசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம், விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், தி.க. மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹமீது, மனித நேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் பாதுஷா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ரெயில் நிலையம் அருகே மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காலை 8 மணிக்கு போலீசார் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து இந்த இடத்தில் மேடை அமைத்து, மைக்செட்டுகள் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி அங்கு பொருத்தி இருந்த மைக்செட்டுகள், மேடையின் மீது போடப்பட்டிருந்த சிகப்பு நிறத்திலான விரிப்புகள், மேடையின் மீது ஏறுவதற்காக வைத்திருந்த படிக்கட்டுகள் ஆகியவற்றை போலீசார் அகற்ற தொடங்கினர். அதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் அங்கு வந்தார். தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசாரும் அங்கு வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் அனுமதி மறுத்தாலும், அதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என துரை.சந்திரசேகரன் தெரிவித்தார். இதையடுத்து அங்கு தி.மு.க.வினரும் திரண்டனர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம்-பரபரப்பு ஏற்படவே போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் ரெயிலடி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் போலீசார் கைப்பற்றி சென்ற மரத்திலான படிக்கட்டுகளை எடுத்து வந்து மேடையின் மீது ஏறுவதற்கு பொருத்தினர். இதன்பின்னர் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.


Next Story