தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கிளனர் சாவு


தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கிளனர் சாவு
x
தினத்தந்தி 28 Jan 2018 4:30 AM IST (Updated: 28 Jan 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கிளனர் பரிதாபமாக இறந்தார்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ஆனந்தகுமார். இவரது மகன் தனுஜன்(வயது 16). 9-ம் வகுப்பு வரை படித்து உள்ள தனுஜன் குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தினக்கூலியாக டேங்கர் லாரியில் கிளனராக வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள 20 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிக்கு நேற்று முன்தினம் இரவு சூரவாரிக்கண்டிகை கிராமத்தை சேர்ந்த டிரைவர் மணி (47) என்பவர் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு சென்றார். அந்த லாரியில் கிளனராக தனுஜன் சென்றார்.

டேங்கர் லாரியை தொழிற்சாலையில் உள்ள மேற்கண்ட தண்ணீர் தொட்டியின் அருகே நிறுத்தி விட்டு டிரைவரான மணி வெளியே சென்று விட்டார். அப்போது தண்ணீர் தொட்டி அருகே நின்று கொண்டிருந்த தனுஜன் அந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. தண்ணீரில் முழ்கிய தனுஜன் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் தனுஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story