அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு: வீரர்களை பந்தாடிய காளைகள்;28 பேர் காயம்


அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு: வீரர்களை பந்தாடிய காளைகள்;28 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Jan 2018 4:23 AM IST (Updated: 28 Jan 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் வீரர்களை காளைகள் பந்தாடியதில் 28 பேர் காயம் அடைந்தனர்.

பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக வாடிவாசல், கேலரி அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இதையடுத்து நேற்று காலை ஜல்லிக்கட்டு நடந்தது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ஜான்சன் தலைமை தாங்கி ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேசுரவன், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆத்தூர் தாசில்தார் ராஜகோபால், துணை தாசில்தார் சரவணகுமார், வட்ட வழங்கல் தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. காளைகள் அடக்கும் வீரர் களுக்கு சீருடை வழங்கப்பட்டிருந்தன. இதனால் சீருடை அணிந்த வீரர்கள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்பட்டனர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர் கள் போட்டி போட்டனர்.

இருப்பினும் சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் காளையர்களை பந்தாடின. இருப்பினும் காளையர்கள் சளைக்காமல் காளையுடன் மல்லுக்கட்டினர். வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக இடையே பரிசுகள் அறிவிக்கப்பட்டன. விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டில், காளைகள் பந்தாடியதில் மாடுபிடி வீரர்கள் 28 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 7 பேர் மேல்சிகிக்சைக்காக வத்தலக்குண்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குளிர்சாதனபெட்டி, பீரோ, கட்டில், எல்.இ.டி. டி.வி. மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக் கட்டை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story