பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 5:28 AM IST (Updated: 28 Jan 2018 5:28 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தி.மு.க.வினரும் அதன் கூட்டணி கட்சியினரும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அரசு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை மக்கள் எதிர்க்கிறார்கள். எனவே பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதனை ஏற்று பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு வாபஸ் பெறாவிட்டால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் மறியல் போராட்டம் நடைபெறும்.

தி.மு.க. ஆட்சியில் டீசல் விலை உயர்ந்த போதிலும் பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. ஏனெனில் மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசு போக்குவரத்துக்கழகம் இருக்கிறது. இதனால் அரசு போக்குவரத்துக்கழகத்தின் இழப்பை ஈடுகட்ட அரசே நிதி உதவி செய்து, புதிய பஸ்களை வாங்கிக்கொடுத்தது.

ஆனால் இந்த அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி விட்டது. இதனால் அரசு பஸ்சில் பயணம் செய்வதை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். இது இந்த அரசின் முடிவை மக்கள் நிராகரித்ததற்கு சமமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி கோஷங்களை சொல்ல, அதனை தொண்டர்கள் திருப்பி சொல்லி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மருதூர் ராமலிங்கம், முன்னாள் நகரசபை தலைவர் து.தங்கராசு, கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.ஆர்.ராதா கிருஷ்ணன், சொத்து மீட்புக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர தலைவர் குமார், பொதுச்செயலாளர் ரவிக்குமார், மீனவர் அணி கார்த்திகேயன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், அவைத்தலைவர் காமராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் குளோப், விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற செயலாளர் தாமரைசெல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், மாநில நிர்வாகி ஸ்ரீதர், பாவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் ஷபியுல்ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக்தாவூது உள்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சிக்கொடிகளுடன் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக இப்போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. பின்னர் காலை 10.45 மணி அளவில் தான் போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் நடந்தது.

இதேபோல் விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏக்கள் குழந்தைதமிழரசன், முத்துக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் தண்டபாணி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வக்கீல் அருள்குமார், தி.மு.க நகர துணை செயலாளர் ராமு, வள்ளலார் குடில் இளையராஜா, இளைஞரணி பொன்கணேஷ், காங்கிரஸ் கட்சி நீதிராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம், ம.தி.மு.க. சவுந்திரராஜன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் சுக்கூர், மனித நேய மக்கள் கட்சி அசோன், பெருந்தலைவர் மக்கள் கட்சி குருசாமி, திராவிடர் கழகம் இளந்திரையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story