சிறுவனை கொடூரமாக தாக்கியதுடன் காலில் போட்டு மிதித்த தந்தை கைது
பெங்களூருவில், பொய் கூறியதால் ஆத்திரமடைந்து சிறுவனை கொடூரமாக தாக்கியதுடன் காலில் போட்டு மிதித்த அவனது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வருபவர் மகேந்திரன். இவருக்கு 6 வயதில் மகன் உள்ளான். இவன் அடிக்கடி தனது பெற்றோரிடம் பொய் சொல்லுவதோடு, அவர்களின் பேச்சை கேட்பது இல்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தனது மகனை வீட்டு அறையில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார்.இந்த தாக்குதல் சம்பவத்தை மகேந்திரனின் மனைவி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2 நிமிடம் 40 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பெற்ற மகன் என்று கூட பாராமல் மகேந்திரன் தனது மகனை சரமாரியாக தாக்குகிறார். தாக்குதலில் வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறி அழ அவனை தலைக்கு மேல் தூக்கி கட்டிலில் வீசுகிறார். மேலும், மகேந்திரன் தனது மகனை கட்டிலில் இருந்து இழுத்து கீழே போட்டு காலால் மிதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது காண்போரின் நெஞ்சை பதற வைக்கின்றன.
இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக கெங்கேரி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நேற்று மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் குறித்து அறிந்தவுடன் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் போலீஸ் நிலையத்துக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பொய் கூறி வந்ததால் ஆத்திரமடைந்த மகேந்திரன் தனது மகனை கொடூரமாக தாக்கியதும், இந்த தாக்குதலை அவருடைய மனைவி செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. மேலும், சமீபத்தில் வீடியோ அடங்கிய செல்போனை பழுது நீக்க மகேந்திரனின் மனைவி ஒரு கடையில் கொடுத்ததும், அந்த கடை உரிமையாளர் அந்த வீடியோவை பார்த்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.