ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் தொழிலாளி


ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் தொழிலாளி
x
தினத்தந்தி 28 Jan 2018 5:48 AM IST (Updated: 28 Jan 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஓட்டல் தொழிலாளியை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

ஈரோடு,

ஈரோடு பெருந்துறைரோட்டில் காலிங்கராயன் விருந்தினர் இல்லம் உள்ளது. இதன் வளாகத்தில் பெரும்பள்ளம் ஓடையோரம் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை கூடியிருந்தனர். அவர்கள் ஓடை ஆக்கிரமிப்பில் வசிப்பதால் வீடுகளை இடிப்பதற்கு தடை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடருவது குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் நுழைந்த ஒருவர், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதிக்குள் திடீரென சென்றார். அங்கு கதவை உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு மாடிப்படி வழியாக விறுவிறுவென மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு அவர் அணிந்து இருந்த லுங்கியை கழற்றிவிட்டு வீசினார். பின்னர் அவர் நிர்வாணமாக நின்று சத்தம் போட்டார்.

அவருடைய சத்தம் கேட்டதும், விடுதியின் முன்பு பொதுமக்கள் திரண்டனர். அப்போது மொட்டை மாடியில் நின்றவர் புலம்பி கொண்டே இருந்தார். மேலும், அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்கி வரவில்லை. மேலும், அவர் தொடர்ந்து தகாத வார்த்தையில் பேசி கொண்டே இருந்தார். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் போலீசாரால் மொட்டை மாடிக்கு செல்ல முடியவில்லை.

இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விடுதி தாழ்ப்பாளை நெம்பி கதவை திறந்து உள்ளே சென்றனர். பின்னர் மொட்டை மாடிக்கு சென்ற அவர்கள் அந்த நபரை லுங்கி அணிய வைத்து பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ராஜேஷ் என்பதும், அவர் ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் இல்லத்தில் மொட்டை மாடியில் ஏறிய தொழிலாளி நிர்வாணமாக நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story