உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 28 Jan 2018 11:48 AM IST (Updated: 28 Jan 2018 11:48 AM IST)
t-max-icont-min-icon

அவருக்கு 50 வயது. அன்பான மனைவி, அழகான மகள். வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தது. ஒரே மகள் என்பதால் மிகுந்த செல்ல மாக வளர்க்கப்பட்டாள்.

வருக்கு 50 வயது. அன்பான மனைவி, அழகான மகள். வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தது. ஒரே மகள் என்பதால் மிகுந்த செல்ல மாக வளர்க்கப்பட்டாள். அவர் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். அவரது நிறுவனத்தில் நிறைய பெண்கள் வேலைபார்த்து வந்தார்கள். அதில் ஒரு நடுத்தர வயது பெண், அதிக காலம் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறாள்.

அந்த பெண், அருகில் உள்ள இன்னொரு மாநிலத்தை சேர்ந்தவள். அவளது தாயார் சொந்த மாநிலத்திலேயே வசித்து வருகிறார். இந்த பெண் விடுதி ஒன்றில் தங்கியிருந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தோழிகள் யாராவது கேட்டால், தனக்கு இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியால் திருமணத்தில் வெறுப்பு வந்துவிட்டது என்று காரணம் சொல்வாள். அவள் வெகுகாலம் அந்த நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததால், உரிமையாளரின் மனைவி, மகளுடனும் நன்கு அறிமுகமாகியிருந்தாள்.

இந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக, உரிமையாளரின் மனைவி திடீரென்று இறந்துபோனார். தாயின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் மகள் தவித்தாள். அப்போது ஏற்கனவே இருந்த அறிமுகத்தை பயன்படுத்தி அந்த நடுத்தர வயது பெண், உரிமையாளரின் குடும்பத்திற்குள் அடியெடுத்துவைத்தாள். அவரது மகளை நன்றாக கவனித்துக்கொண்டாள். அப்படியே குடும்பத்தில் ஐக்கியமானாள். வீட்டிலேயே தங்கி, உரிமையாளரிடமும் பாசத்தைக் கொட்டினாள். இரண்டு ஆண்டுகளில் மகள் விருப்பத்தோடு அவர், அவளை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு அவள் அடிக்கடி தனது தாயாரை பார்க்க சொந்த மாநிலத்திற்கு சென்று வந்தாள். திடீரென்று ஒருநாள், அவள் தனது உறவினர் என்று கூறி ஆண் ஒருவரை அழைத்து வந்து, கணவரிடம் அறிமுகம் செய்துவைத்தாள். ‘நீங்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செய்கிறீர்கள். உங்களுக்கு பாதுகாப்பு அவசியம். அதனால் எப்போதும் இவர் உங்களோடு இருக்கட்டும். உங்களை நன்றாக கவனித்துக்கொள்வார்’ என்றாள். அந்த நபருக்கும் கிட்டத்தட்ட ஐம்பது வயதிருக்கும். புது மனைவி சொன்னதை உரிமையாளரும் ஏற்றுக்கொண்டார்.

எப்போதும் உரிமையாளரோடு இருந்த அந்த நபர், வேலைக்கு சேர்ந்த சில மாதங் களிலே அவரிடம் குடிப்பழக்கத்தை உருவாக்கிவிட்டார். சில கிளப்களில் அவரை உறுப்பினராக்கி, தினமும் குடிக்கும் நிலைக்கு அவரை கொண்டுபோய் விட்டுவிட்டார். குடிப்பழக்கம் அதிகரித்ததால் உரிமையாளரின் உடல் நிலை அடிக்கடி பாதிக்கும் சூழல் உருவானது.

இந்த நிலையில் உரிமையாளரின் மகளுக்கு 18 வயதானது. அப்போது, சித்தியான அந்த நடுத்தர வயது பெண், தனது உறவினர் மகன் என்று கூறி 22 இளைஞனை, வீட்டில் வேலைக்கு கொண்டு வந்து சேர்த்தாள். அவனை, அந்த டீன்ஏஜ் பெண்ணோடு நெருக்கமாக பழக அனுமதித்தாள்.

திடீரென்று வந்த அவனது அருகாமை டீன்ஏஜ் பெண்ணுக்கு எரிச்சலை உருவாக்க, தனது சித்தியிடம் முறையிட்டாள். சித்தியோ, ‘அவன் ரொம்ப நல்ல பையன். நம்ம குடும்பத்திற்கு ஏற்றவன். ஒருசில வருடங்களில் உனக்கு அவனைத்தான் திருமணம் செய்துவைக்கப்போகிறேன். அதனால் அவன் உன்னோடு நெருக்கமாக பழகினால், தப்பு ஒன்றும் இல்லை’ என்றாள்.

சித்தியின் பதிலும், அவளது நடவடிக்கைகளும், தந்தையின் ஆரோக்கிய குறைபாடும் அவளது உள்ளுணர்வை எச்சரிக்க, தந்தையின் நெருங்கிய நண்பரான தொழிலதிபரிடம் போய், வீட்டில் நடக்கும் அத்தனை விப ரீதங்களையும் ஒப்புவித்தாள். அவர், அந்த நடுத்தர வயது பெண்ணின் மாநிலத்திற்கு ஆள் அனுப்பி, அவளை பற்றி விசாரிக்கச் செய்தார்.

விசாரித்ததில் கிடைத்தது அதிர்ச்சி தகவல். சித்தியாக இருக்கும் அந்த பெண் வேலைக்கு சேர்த்திருக்கும் நடுத்தர வயது நபர், அவளது முன்னாள் காதலன் என்பதும்- அவர்கள் இருவருக்கும் இடையே இப்போதும் உடல்ரீதியான தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு உரிமையாளரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சொத்துக்களில் ஒரு பகுதியை அபகரித்துக்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக வேலைக்கு சேர்ந்த இளைஞனும், அந்த சித்தியின் குடும்பத்தை சேர்ந்தவன்தான். உரிமையாளரின் மகளை வசப்படுத்த அவனை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறாள்.

மொத்த சதியையும் அறிந்த அந்த தொழிலதிபர், தனது நண்பரான உரிமையாளரையும், அவரது மகளையும் இக்கட்டில் இருந்து காப்பாற்றவும், அபகரிக்கப்பட்ட சொத்து களை மீட்கவும் அதிரடியான சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.

சதி எப்படி எல்லாம் அரங்கேறுகிறது பார்த்தீர்களா?

-உஷாரு வரும்.

Next Story