போலீசாரை கண்டித்து தற்கொலை மிரட்டல்


போலீசாரை கண்டித்து தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 29 Jan 2018 5:00 AM IST (Updated: 29 Jan 2018 1:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், போலீசாரை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கையா. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 30). வேன் டிரைவர். இவருக்கு கனகா என்ற மனைவியும் 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் வானரமுட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, வாகன சோதனையில் ஈடுபட்ட நாலாட்டின்புத்தூர் போலீசார், மாரிமுத்து மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை அவதூறாக பேசினார்களாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று காலையில் தன்னை தாக்கிய போலீசாரை கண்டித்து வானரமுட்டி அம்பலத்தெருவில் உள்ள 200 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி, போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் மாரிமுத்துவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, என்னை அவதூறாக பேசிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் நான் கீழே வருவேன் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் சுமார் 1 மணி நேரம் கழித்து மாரிமுத்து கீழே இறங்கினார். அவர் மீது நாலாட்டின்புத்தூர் போலீசார் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story