3 லட்சத்து 46 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்


3 லட்சத்து 46 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:30 AM IST (Updated: 29 Jan 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 46 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் பள்ளிகள், சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என 2 ஆயிரத்து 298 மையங்களில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. சேலம் குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். பின்னர், அவர் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் கனகராஜ், மாநகர் நல அலுவலர் பிரபாகரன், மாநகராட்சி உதவி ஆணையர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 822 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

தற்போது மாவட்டத்தில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 301 குழந்தைகளுக்கு போலி சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மற்றும் ஏற்காட்டில் 6 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும், அயோத்தியாப்பட்டணம், வீரபாண்டி மற்றும் எடப்பாடி பகுதிகளில் தலா ஒரு நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இதுதவிர, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையம், சந்தைகள், வணிக வளாகங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப் பட்டது. இந்த பணியில் சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 655 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 19 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு ஆணையாளர் (பொறுப்பு) முருகன் தலைமை தாங்கினார். துப்புரவு அலுவலர் செந்தில்குமார், துப்புரவு ஆய்வாளர்கள் தங்கவேலு, ஜான்விக்டர், ரோட்டரி சங்க மண்டல தலைவர் சீனிவாசன், எடப்பாடி நகர தலைவர் அர்த்தனாரீஸ்வரன், செயலாளர் ஜெயகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன் கலந்து கொண்டு ஒரு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். எடப்பாடி நகராட்சி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.


Next Story