கிராம மக்கள் சாலைமறியல் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார்


கிராம மக்கள் சாலைமறியல் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக புகார்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:15 AM IST (Updated: 29 Jan 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் ஊராட்சியில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலப்பதாக கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜலகண்டாபுரம்,

ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, காவிரி கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதமாக இந்த பகுதியில் சேரும் கழிவுநீர், குடிநீர் தொட்டி அருகே தேங்கி நின்று குடிநீரில் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் வெளியேற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அந்த பகுதி மக்கள் நேற்று காலை 9 மணியளவில் ஜலகண்டாபுரம்-ஆடையூர் ரோட்டில் அய்யன்ஏரி அருகே திரண்டு வந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சாக்கடை கழிவுநீர் தேங்காமல் வடிகால் வசதி செய்து தரவேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை முடிவில் ஆவடத்தூர் ஊராட்சி செயலாளர் ஞானதுரை சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலமாக சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ள இடத்தில் இருந்து கால்வாய் அமைத்து கழிவுநீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.

அதன்பிறகு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story