காவிரியில் தண்ணீரை பெற்றுத்தர வலியுறுத்தி ரெயில் மறியல் வைகோ உள்பட 487 பேர் கைது


காவிரியில் தண்ணீரை பெற்றுத்தர வலியுறுத்தி ரெயில் மறியல் வைகோ உள்பட 487 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jan 2018 4:30 AM IST (Updated: 29 Jan 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்திடம் இருந்து காவிரியில் தண்ணீரை பெற்றுத்தர வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைகோ உள்பட 487 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் சம்பா பயிரை காப்பாற்ற உடனடியாக கர்நாடகத்திடம் இருந்து மத்திய, மாநில அரசுகள் தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி தஞ்சையில் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அனைத்து விவசாய சங்கங்கள், அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்துக்கு ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்கள் துரைமாணிக்கம், சண்முகம், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்டவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். அப்போது ம.தி.மு.க. தொண்டர் ஒருவர் ரெயில் வந்ததும் கொடியுடன் ரெயிலை நோக்கி ஓடினார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

முன்னதாக மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வைகோ 10 மணிக்கு ரெயில் நிலையம் வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிளும் வந்தனர். 10.30 மணிக்கு அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திருஞானம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாறன், கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் ராமசாமி, காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயாலுதீன், மனித நேய மக்கள் கட்சி மாநில செயலாளர் பாதுஷா மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ தலைமையிலான 187 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 16 பெண்களும் அடங்குவர்.


முன்னதாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளே செல்ல முடியாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் போராட்டக்குழு சார்பில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


கும்பகோணத்தில் ரெயில் மறியல் செய்வதற்காக அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் ரெயில் நிலையம் முன்பு திரண்டு வந்தனர். முன்னதாக கும்பகோணம் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் புகுந்து சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவி. செழியன், நகர செயலாளர் தமிழழகன், ஒன்றியசெயலாளர் ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழருவி, சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சின்னைபாண்டியன், விவசாயிகள் சங்க மாநிலகுழு உறுப்பினர் ராமலிங்கம், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


அப்போது அங்கு இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கோவி.செழியன் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை, கும்பகோணத்தில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் வைகோ உள்பட மொத்தம் 487 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story