வறட்சி காலத்தில் திறப்பு: விவசாயிகளிடையே வரவேற்பு இல்லாமல்போன நெல் கொள்முதல் நிலையங்கள்


வறட்சி காலத்தில் திறப்பு: விவசாயிகளிடையே வரவேற்பு இல்லாமல்போன நெல் கொள்முதல் நிலையங்கள்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:43 AM IST (Updated: 29 Jan 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் வறட்சியான காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதால் விவசாயிகளிடையே போதிய வரவேற்பு இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழையின்றி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மானாமதுரை பகுதியில் வழக்கமாக 13 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்படுவது வழக்கம். போதிய மழையில்லாததால் வெறும் 800 ஏக்கரில் மட்டுமே நெல் நடவு செய்யப்பட்டிருந்தது. மோட்டார் பம்பு செட் விவசாயிகள் மட்டுமே நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஆண்டு வெகு குறைவாக நெல் விவசாய பணிகள் நடந்ததால், நெல் கொள்முதல் நிலையம் திறந்தும் விவசாயிகள் யாரும் வரவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்து நெல் வரத்து இன்றி அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த ஆண்டும் போதிய விளைச்சல் இல்லாதநிலையில் ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, மறவமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

சன்ன ரக நெல்லுக்கு கிலோவிற்கு ரூ.16 என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. ராஜகம்பீரம் நெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை விவசாயிகள் யாரும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. முத்தனேந்தலில் மேட்டுமடை, மிளகனூர் பகுதிகளில் மோட்டார் பம்பு செட் மூலம் நடவு பணிகளில் ஈடுபட்ட ஒருசில விவசாயிகள் மட்டுமே நெல் மூடைகளை கொண்டு வந்துள்ளனர். திருப்பாச்சேத்தி, சிவகங்கை, மறவமங்கலம் பகுதிகளிலும் இதே நிலை தான். ஒரு சில விவசாயிகள் மட்டுமே கொள்முதல் செய்ய நெல் மூடைகளை கொடுத்து வருகின்றனர். அவர்களும் விலை நிர்ணயம் குறைவாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- வழக்கமான செலவைவிட இந்த ஆண்டு நெல் நடவு பணிகளுக்கு செலவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 40 மூடை நெல் கிடைத்த இடத்தில், தற்போது வெறும் 10 மூடை மட்டுமே கிடைத்துள்ளது. தனியார் வியாபாரிகள் நெல்லை கிலோ ரூ.18 என வாங்குகின்றனர். ஆனால் அரசு நெல் கொள்முதல் மையத்தில் ரூ.16 என்று வாங்குகின்றனர். விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான விலையை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மழையை நம்பி பயிரிட்ட விவசாயிகள் பலருக்கும் போதிய விளைச்சல் இன்றி நெற்பயிர்கள் கருகிவிட்டன. தற்போது நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டதால் வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் போலியான பெயர்களில் மையங்களில் விற்பனை செய்ய வாய்ப்புண்டு. இதன்மூலம் அளவிற்கு அதிகமான வரத்து இருந்தால் விவசாயிகளுக்கு வறட்சிக்கான இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை. எனவே நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story