உறவினர்கள் கைவிட்ட நிலையில் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த மூதாட்டி


உறவினர்கள் கைவிட்ட நிலையில் சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த மூதாட்டி
x
தினத்தந்தி 29 Jan 2018 5:00 AM IST (Updated: 29 Jan 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

உறவினர்கள் கைவிட்ட நிலையில், சாலையோரத்தில் தஞ்சம் அடைந்த மூதாட்டியை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டை சேர்ந்தவர் ராமசாமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து விட்டார். அவருடைய மனைவி காமாட்சி (வயது 80). குடும்பத்தினர் மற்றும் உறவினர் கைவிட்ட நிலையில், அதே பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வந்தார்.

இந்தநிலையில் சாலையில் நடந்து சென்றபோது, காமாட்சி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவருடைய காலில் முறிவு ஏற்பட்டது. அதன்பின்னர் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. இதனால் எரியோடு அருகே திண்டுக்கல்-கரூர் மாநில நெடுஞ்சாலையோரத்தில் தஞ்சம் அடைந்து விட்டார். இரவில் நடுங்க வைக்கும் குளிரிலும், பகலில் கொளுத்தும் வெயிலிலும் மூதாட்டி சுருண்டு கிடக்கிறார்.

தினமும் அந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. பலர் நடந்து செல்கிறார்கள். ஆனால் மூதாட்டியை யாரும் கண்டுகொள்வதில்லை. சிலர் மட்டும் மூதாட்டியை பார்த்து பரிதாபப்படுகின்றனர். இருப்பினும், மூதாட்டிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை.

ஆனால் எரியோட்டை சேர்ந்த 6 வயது சிறுமி, மூதாட்டிக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வருகிறாள். அந்த சிறுமியின் பெயர் கலா. இவள், 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். தினமும் அந்த மூதாட்டிக்கு உணவு, தண்ணீர் கொடுத்த பிறகே பள்ளிக்கு செல்கிறாள்.

பள்ளிக்கூடம் முடிந்து மாலையிலும் உணவு, தண்ணீர் கொடுத்து வருகிறாள். மனிதநேயத்துடன் இந்த சிறுமி செய்து வரும் சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். அதேநேரத்தில் ஒரே இடத்தில் கிடப்பதால் மூதாட்டியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருக்கிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலையோரத்தில் கிடக்கும் மூதாட்டியை மீட்டு உரிய சிகிச்சை அளித்து முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story