சென்னையில் சைக்கிள் போக்குவரத்து திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்


சென்னையில் சைக்கிள் போக்குவரத்து திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 Jan 2018 5:09 AM IST (Updated: 29 Jan 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சைக்கிள் போக்குவரத்து திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள இலவச சைக்கிள் பயன்பாட்டு திட்டம் பயணிகளிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுற்றுச்சூழலுக்கும், உடல் நலனுக்கும் நன்மை பயக்கக்கூடிய இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும். ஆனால் மொத்தம் 120 சைக்கிள்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால் தேவைக்கு போதுமானதாக இல்லை. சைக்கிள்களை எடுத்த இடத்தில் மீண்டும் விட வேண்டியது இருப்பதால் பல்வேறு இடங்களுக்கு தொடர் பயணம் மேற்கொள்பவர்களால் இந்த சைக்கிள்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் இலவசமாக சைக்கிள்களை பயன்படுத்தும் திட்டம் உள்ளது. அதன்படி ஒரு நகரில் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் சைக்கிள்களை எடுத்து எங்கு வேண்டுமானாலும் விட்டுச்செல்ல முடியும். சென்னையிலும் முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து பயனாளர்களை பதிவு செய்து, செல்போன் ‘செயலி’ மூலம் இதேபோன்ற திட்டத்தை செயல்படுத்த முடியும்.

இதன் மூலம் பள்ளி-கல்லூரி மாணவர்களும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் பஸ் அல்லது ரெயில் நிலையங்களில் இருந்து சைக்கிள்கள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு எளிதில் செல்லலாம். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகபட்சமாக ரூ.20 கோடி கூட செலவாகாது. எனவே இந்த திட்டத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும். சென்னையில் 378 இடங்களில் சுமார் 5 ஆயிரம் சைக்கிள்களுடன் இந்த திட்டத்தை செயல்படுத்தப்போவதாக பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு அறிவித்தது.

ஆனால், குறித்த காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததாலும், அரசின் அலட்சியத்தாலும் இன்னும் திட்டம் செயல் வடிவம் பெறவில்லை. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகவும், சுற்றுச்சுழல் மாசு ஏற்படுவதை குறைக்கும் வகையிலும் உள்ள இந்த திட்டத்தை மொத்தம் 500 இடங்களில் குறைந்தது 10 ஆயிரம் சைக்கிள்களுடன் உடனடியாக செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story