மகதாயி நதிநீர் பிரச்சினை: தண்ணீரை தடுக்க கர்நாடகம் தடுப்பணை கட்டுகிறதா?


மகதாயி நதிநீர் பிரச்சினை: தண்ணீரை தடுக்க கர்நாடகம் தடுப்பணை கட்டுகிறதா?
x
தினத்தந்தி 29 Jan 2018 5:48 AM IST (Updated: 29 Jan 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

மகதாயி நதிக்கு செல்லும் தண்ணீரை தடுக்க கர்நாடக பகுதியான கனகும்பியில் அரசு தடுப்பணை கட்டுகிறதா? என்பது குறித்து கோவா மாநில சபாநாயகர் தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் மகதாயி நதியானது கோவா, மராட்டிய மாநிலம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த நிலையில், மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை மகதாயி நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகதாயி நதியின் குறுக்கே பெலகாவி மாவட்டம் கனகும்பியில் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்காக கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதாக கோவா அரசு குற்றச்சாட்டை கூறியது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி வினோத் பால்யேகர், கனகும்பி பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்காக கர்நாடக அரசு தடுப்பணை கட்டும் பணியை மீண்டும் தொடங்கி இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு வினோத் பால்யேகருக்கு முதல்-மந்திரி சித்தராமையா, பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, கன்னட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், பெலகாவி மாவட்டம் கனகும்பிக்கு கோவா மாநில சபாநாயகர் பிரமோத் சாவந்த் தலைமையில் துணை சபாநாயகர் மைகேல் லோபு, பிரசாத் காவங்கர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் உள்பட 40 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலையில் திடீரென்று வந்தனர். அந்த குழுவினருடன் முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரும் வருவதாக தகவல் வெளியானது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை கருதி கடைசி நேரத்தில் அவர் வரவில்லை.

பின்னர் சபாநாயகர் பிரமோத் சாவந்த் தலைமையில் வந்த குழுவினர் கனகும்பி பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை கட்டும் பணி நடைபெறுகிறதா? என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தார்கள். அதன்பிறகு, சபாநாயகர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து கோவாவுக்கு புறப்பட்டு சென்றார்கள். முன்னதாக கோவா துணை சபாநாயகர் மைகேல் லோபு நிருபர்களிடம் கூறியதாவது:-

“மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக கோவா, கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு மகதாயி நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடுவர் மன்றத்தின் உத்தரவை மீறி கர்நாடக அரசு கனகும்பியில் தடுப்பணை கட்டுகிறது. கோவாவுக்கு வர வேண்டிய தண்ணீரை வர விடாமல் கர்நாடக அரசு தடுக்கிறது. இதனால் அணைகட்டுவதாக கூறப்படும் பகுதியை பார்வையிட தான் நாங்கள் வந்துள்ளோம்.

கர்நாடக அரசு விதிமுறைகளை மீறி தடுப்பணை கட்டும் பணியை செய்து வருகிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். விதிமுறைகளை மீறி தடுப்பணை கட்டுவதை கர்நாடக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

கோவா சபாநாயகர் தலைமையிலான குழுவினர், கனகும்பி பகுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்த கர்நாடக அரசிடம் எந்த விதமான அனுமதியையும் பெறவில்லை. அந்த குழுவினர் திடீரென்று ஆய்வு நடத்த வந்ததால், அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர். இதனால் கனகும்பி பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

இதற்கிடையில், மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பான இறுதிகட்ட விசாரணை மகதாயி நடுவர் மன்றத்தில் பிப்ரவரி 6-ந் தேதியில் இருந்து தொடர்ந்து நடைபெற உள்ளதால், இந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை தாக்கல் செய்யவே கோவா அரசு, சபாநாயகர் தலைமையிலான குழுவினரை அனுப்பி ஆய்வு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி கர்நாடக நீர்ப் பாசனத்துறை மந்திரி எம்.பி. பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “மகதாயி நடுவர் மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை கட்டும் பணியை கர்நாடக அரசு முன்பே நிறுத்தி விட்டது. ஆனால் கர்நாடக அரசு மீது வேண்டும் என்றே கோவா குற்றச்சாட்டுகளை கூறுகிறது, கர்நாடக அரசிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கனகும்பி பகுதியில் கோவா குழுவினர் ஆய்வு நடத்தியது விதிமுறைகளை மீறியதாகும். சட்ட விதிமுறைகளை கோவா குழுவினர் மீறி விட்டார்கள்,“ என்றார்.

கனகும்பி பகுதியில் கோவா குழுவினர் ஆய்வு நடத்தி இருப்பது குறித்து பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். ஆனால் கோவா குழுவினர் ஆய்வு செய்ததற்கு விவசாயிகள் சங்க தலைவர் வீரேஷ் மற்றும் கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Next Story