பச்சை தேயிலை ஒரு கிலோ ரூ.30-க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


பச்சை தேயிலை ஒரு கிலோ ரூ.30-க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

பச்சை தேயிலை ஒரு கிலோ ரூ.30-க்கு விலை நிர்ணயம் செய்ய கோரி மஞ்சூரில் 2-வது கட்டமாக விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது தேயிலை விவசாயம். இந்த தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். பச்சை தேயிலைக்கு கடந்த 1998-ம் ஆண்டு கால கட்டத்தில் ஒரு கிலோ ரூ.20 வரை விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஓரளவு பிழைப்பு நடத்தி வந்தனர்.

இதையடுத்து கடந்த 2000-ம் ஆண்டு காலக்கட்டத்தில் விலை படிப்படியாக சரிந்து ஒரு கிலோ பச்சை தேயிலை ரூ.6 முதல் ரூ.8 வரை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் பல கட்டங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டு மாத கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் தங்களது அன்றாட தேவையை பூர்த்தி செய்ய முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் சிரமப்பட்டனர். ஒரு சிலர் வேறு வழியின்றி தேயிலை தோட்டங்ளை விற்றும் ஒரு சிலர் குத்தகைக்கு கொடுத்தும் பிழைப்பு நடத்தினர். பெரும்பாலான விவசாயிகள் பிழைப்புக்காக கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகள் சார்பில் பச்சை தேயிலைக்கு குறைந்த பட்சம் விலை நிர்ணயம் செய்ய வேண்டி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய உத்தரவிட்டது. ஆனால் இது நாள் வரை மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து இடைக்கால தீர்வாக மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள், தொழிற்சாலை அதிபர்கள் கொண்ட தேயிலை விலை நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனாலும் இந்த கமிட்டி மாதந்தோறும் குறைந்தபட்ச விலையை அனைத்து தொழிற்சாலைகளும் நிர்ணயம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான தொழிற் சாலைகள் நிர்ணயம் செய்யவில்லை.

தற்போது 1 கிலோ பச்சை தேயிலையை பறிக்க கூலி மட்டும் ரூ.5 முதல் ரூ.6 வரை செலவாகிறது.மேலும் உரமிடுதல், மருந்து தெளித்தல், களை எடுத்தல் மற்றும் பராமரிப்பு மற்றும் இதர செலவினங்களுக்கு தற்போது 1 கிலோ பச்சை தேயிலை பறிப்பதற்கு ரூ.15 வரை செலவாகிறது. ஆனால் தற்சமயம் 1 கிலோ பச்சை தேயிலைக்கு விவசாயிகளுக்கு கிடைப்பதோ ரூ.10 முதல் ரூ.12 வரை தான். இந்த விலை நிர்ணயத்தை கொண்டு விவசாயிகள் எந்த வித அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும், கந்து வட்டிகாரர்களிடம் வட்டிக்கு பணம் பெற்று வேறு வழியின்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

இதை தொடர்ந்து நீலகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சங்கம் சார்பில் குறைந்தபட்சம் 1 கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வேண்டி மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்து செல்ல விவசாயிகளை திரட்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தது. முதற்கட்டமாக கடந்த வாரம் மஞ்சூர் அருகில் உள்ள காந்தி மைதானத்தில் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக மஞ்சூர் பஜாரில் நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ஜே.பி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஏ.பெள்ளி, மஞ்சூர் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், மஞ்சூர் தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் தேவதாஸ், முக்கிமலை சுகுமாரன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க பல்வேறு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story