மாவட்டத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல், 3,670 பேர் கைது


மாவட்டத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல், 3,670 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2018 4:00 AM IST (Updated: 30 Jan 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் உழவர் சந்தை முன்பு தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி தலைமையில், நகர செயலாளர் கே.எஸ்.ராஜா முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உள்பட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் கட்சி கொடிகளை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து கோ‌ஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்று அண்ணாபாலம் அருகில் சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். அப்போது தமிழக அரசே வாபஸ் வாபஸ் வாங்கு! பஸ்கட்டண உயர்வை வாபஸ் வாங்கு! என தமிழக அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.

இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டம் செய்ததாக அனைத்து கட்சியை சேர்ந்த 260 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

அதேபோல் கடலூர் பச்சையாங்குப்பம் இரட்டை சாலை சந்திப்பில் ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் மாருதி ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் திலகர் மற்றும் கூட்டணி கட்சியினர் நெல்லிக்குப்பத்தில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அண்ணாகிராமத்தில் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் அவைத்தலைவர் ராமசந்திரன் மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோவிலில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமையில் நகர செயலாளர் கணேசமூர்த்தி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கீரன், நஜீர்அகமது உள்பட கூட்டணி கட்சியினர் பலர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்தனர்.

Next Story