மகளிருக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


மகளிருக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:15 AM IST (Updated: 30 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் மகளிருக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

திருச்செங்கோடு,

தேசிய மகளிர் ஆணையத்தின் 25-வது ஆண்டு நிறைவு வெள்ளி விழாவை முன்னிட்டு மகளிருக்கான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருச்செங்கோடு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன், நாமக்கல் தொகுதி பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பொன்.சரஸ்வதி, ஜி.சித்ரா, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள்ஆர்.விஜயலட்சுமி, வி.ஜுலியட் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு மகளிருக்கான சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கல்லூரி மாணவிகள்

ஊர்வலம் திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகள் வழியாக திருச்செங்கோடு தாசில்தார் அலுவலக வளாகத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பெண்கள் நல சட்டங்கள், பெண்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

ஊர்வலத்தில் திருச்செங்கோடு உதவிகலெக்டர் பாஸ்கரன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் திட்ட அலுவலர் பத்மாவதி, திருச்செங்கோடு தாசில்தார் பூவராகவன், விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பி.டி.சுரேஷ்குமார், டீன்கள் குமரவேல், மல்லிகாராமசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பயிற்சி மையம்

திருச்செங்கோடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான தொடக்கநிலை ஆயத்த பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான தொடக்க நிலை ஆயத்தப் பயிற்சி மையத்தினை திறந்து வைத்தனர்.

பின்னர் அவர்கள் பயிற்சி மையத்தில் உள்ள 10 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வண்ண ஆடைகள் மற்றும் அடையாள அட்டைகளையும், பயிற்சி மையத்திற்கு நன்கொடை வழங்கிய பல்வேறு நபர்களுக்கு நினைவு பரிசுகளையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவித்திட்ட அலுவலர் சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமையாசிரியர் பு.லோகநாதன் நன்றி கூறினார். 

Next Story