பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. - கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள், டி.ஆர்.பாலு, முத்தரசன் உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று திருவாரூர் பஸ்நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர செயலாளர் வாரைபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் சங்கர், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ரெங்கசாமி, நகர செயலாளர் ராமசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மறியல் போராட்டத்தி்ல் ஈடுபட்ட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் புலிவலம் வாளவாய்க்கால் ரவுண்டானாவில் நடந்த சாலைமறியல் போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் புலிவலம்தேவா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாநில பொறுப்பு செயலாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் வடிவழகன், நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் புலிகேசி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் 120 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் மாவூரில், சோழங்கநல்லூர் ஆகிய இடங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடியில் கீழ்ப் பாலம், மேலப்பாலம் மற்றும் காளவாய்க்கரை ஆகிய இடங்களில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கீழ்ப்பாலம் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமை தாங்கினர். டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவ புண்ணியம், ராஜமாணிக்கம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட செயலாளர்கள் இந்திய கம்யூனிஸ்டுவை சேர்ந்த செல்வராஜ் , ம.தி.மு.க.வை சேர்ந்த பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் 3 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., டி.ஆர்.பாலு, முத்தரசன் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி குடவாசல் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், காங்கிரஸ் வட்டார தலைவர் மினி அய்யா, திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் வீரையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுப்ரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியலில் கலந்து கொண்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல குடவாசல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் ஆடலரசன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, நகர செயலாளர் ரகுராமன், விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் வி.டி.செல்வம், தொகுதி செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் ஜான்மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ஆடலரசன் எம்.எல்.ஏ., உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல மணலி, ஆலத்தம்பாடி, கச்சனம், மடப்புரம், ராயநல்லூர், கட்டிமேடு, பாமணி உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேரை போலீசார் கைது செய்தனர்.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நீடாமங்கலத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்தமல்லி சோமசுந்தரம் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் விசு.அண்ணாதுரை, நகரசெயலாளர் ஆர்.ராஜசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடுவூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவநாதன் தலைமை தாங்கினார். சாலை மறிலில் ஈடுபட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story