பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி தி.மு.க.-தோழமை கட்சியினர் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி தி.மு.க.-தோழமை கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி திருச்சியில் தி.மு.க-தோழமை கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனையொட்டி நேரு எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,


பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஜனவரி 29-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், ஒன்றிய, நகர தலைமையிடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகே நேற்று காலை தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என். நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் ஜவகர், கலை, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், ரெக்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹபீப் ரகுமான், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ரகீம் உள்பட ஏராளமானவர்கள் நேருவுடன் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியல் செய்தவர்கள் தமிழக அரசே, தமிழக அரசே பஸ் கட்டண உயர்வை முழுமையாக வாபஸ் வாங்கு, பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும்வரை ஓய மாட்டோம், ஏழைகள் வயிற்றில் அடிக்காதே என்பன போன்ற கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நேரு எம்.எல்.ஏ. உள்பட 430 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் போலீஸ் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களில் ஏற்றப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்பாக நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. ஆட்சியை விட்டு இறங்கும்போது அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 900 கோடி கடன் வைத்து விட்டு சென்றதாக கூறி இருக்கிறார். புதிய வழித்தடங்களில் பஸ் விடுவது, ஊழியர் நியமனம், ஓய்வூதியம் வழங்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளால் ஆண்டுதோறும் போக்குவரத்து கழக செலவினம் அதிகரித்துக்கொண்டு தான் செல்லும். இது எல்லா ஆட்சியிலும் நடப்பது தான்.

தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது. அடுத்து தி.மு.க. ஆட்சி அமைந்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். எனவே முந்தைய ஆட்சியில் நடந்ததை பற்றி குறை கூறுவது சரி அல்ல. அரசு தான் நஷ்டத்தை சரி செய்ய நிதி ஒதுக்கவேண்டும். அதனை விடுத்து பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது ஏற்புடையது அல்ல’ என்றார். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை 6 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல முசிறி கைகாட்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு முசிறி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் கலைச்செல்வன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பரமசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி வீனஸ் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 91 பேரை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கோவிந்தராசு, இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் கைது செய்தனர்.

துறையூரில், ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியினர் பஸ் நிலையம் அண்ணாசிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார்கள். மறியலில் ஈடுபட்ட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story