பஸ் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி அரசியல் கட்சியினர், மாணவர்கள் சாலை மறியல்


பஸ் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி அரசியல் கட்சியினர், மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:15 AM IST (Updated: 30 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரசியல் கட்சியினர், மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பஸ் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கல்லூரி முன்பு அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

நமணசமுத்திரம் அருகே லெணா விலக்கில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களும், வகுப்புகளை புறக் கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பஸ் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து நமணசமுத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு இருந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

இதேபோல புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் 19 பேரையும், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்புமணவாளன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆவுடையார்கோவிலில் இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச்செயலாளர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவரணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர்கள் ராமசாமி, செல்வின்ராஜ், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story