பிளஸ்-2 மாணவர் மர்மச்சாவு: மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் கலெக்டரிடம் மனு


பிளஸ்-2 மாணவர் மர்மச்சாவு: மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 30 Jan 2018 4:15 AM IST (Updated: 30 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடமும், அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமும் கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் முதியோர் உதவித்தொகை, ரேஷன் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை தாலுகா பவித்திரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பவித்திரம் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த எனது மகன் மனோஜ்சந்திரன் கடந்த 22-11-2017 அன்று பள்ளிக்கு அருகாமையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. கொலைக்கான காரணங்கள் அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். இதுதொடர்பாக போலீசார் சரியான விசாரணை செய்யவில்லை. போலீஸ் சூப்பிரண்டுக்கு பதிவு தபால் மூலம் மனு அளித்து உள்ளோம். பிறகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு நேரில் சென்று மனு அளித்து உள்ளோம். இதுவரை வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எந்த தகவலும் இல்லை. என் மகள் வைத்தீஸ்வரி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவரை பள்ளியில் சிலர் மிரட்டி வந்ததால் என் மகனின் நிலைமை என் மகளுக்கும் வரக்கூடாது என்பதற்காக பயந்து கொண்டு என் மகள் பள்ளிக்கு செல்ல மறுக்கிறாள்.

எனவே, எனது மகன் மரணத்திற்கு தகுந்த நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குற்றவாளிகளை கண்டறிந்து உரிய வழக்குப்பதிவு செய்ய வேண்டும். என் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தண்டராம்பட்டு தாலுகா தொட்டியார்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சில ஆண்டுகளாக தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. எங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி கட்டி முடித்து சில மாதங்கள் கழிந்த நிலையில் இதுவரையில் இன்னும் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரையில் குடிநீர் வர வில்லை. எனவே, எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் விஜயராஜ் தலைமையில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு பஸ் கட்டணங்களை உயர்த்தி உள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்களின் போராட்டங்களை சமாளிக்கும் விதமாக பஸ் கட்டணத்தை குறைப்பதாக நாடகம் ஆடியுள்ளது. தமிழகத்தில் 80 சதவீத மக்கள் பஸ்களை தான் பயன்படுத்துகிறார்கள். கட்டண உயர்விற்கு எதிராக நடத்தும் போராட்டங்களில் போலீசார் தடியடி நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ள பஸ் கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செங்கம் தாலுகா கொட்டையூரை சேர்ந்த நரிக்குறவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொட்டையூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. எங்களில் பெரும்பாலானோருக்கும் வீட்டுமனைப்பட்டா இல்லை. எனவே எங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். அதேபோல் துக்காப்பேட்டை பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெரும்பாலானோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story