ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 30 Jan 2018 4:15 AM IST (Updated: 30 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கத்தில் ஆசிரியர் வீட்டில் 9 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பனப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் தேவராஜ் நகரை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 54), வாலாஜாவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் சென்னையில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவரது வீட்டின் பக்கத்தில் நெமிலி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செந்தில் வீடு உள்ளது. இவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிவபிரகாசமும், அவரது மனைவி சுதாவும் சென்னையில் நடைபெறும் உறவினர் திருமணத்துக்காக சென்றனர்.

அங்கு திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவு 1-30 மணிக்கு வீடு திரும்பினர். வீட்டின் பூட்டை திறக்கும்போது வீட்டுக்குள் மின்விளக்கு போடப்பட்டு வெளிச்சம் இருந்தது. மேலும் வீட்டுக்குள் மர்மநபர்களின் பேச்சுக்குரல் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 6 பவுன் தங்ககாசு, மோதிரம், கம்மல் உள்பட 9 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

கணவன்-மனைவி இருவரும் திருமணத்துக்கு சென்றதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து நகை, பணத்தை திருடி உள்ளனர். இவர்கள் உள்ளே வந்ததை பார்த்ததும் கையில் கிடைத்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டனர். இதனால் பீரோவில் இருந்த ரூ.4,500 மற்றும் சில வெள்ளி பொருட்கள் தப்பின. மேலும் திருமணத்துக்கு செல்வதால் சுதா நகைகளை அணிந்து சென்றதால் அந்த நகைகள் தப்பியது.

இதுகுறித்து சிவபிரகாசம் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டின் பக்கத்து வீட்டிலேயே திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story