பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்


பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:23 AM IST (Updated: 30 Jan 2018 4:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ. கூறினார்.

பெங்களூரு,

கவுரி லங்கேஷ் அறக்கட்டளை சார்பில் கவுரி லங்கேஷ் பிறந்த தினத்தை கவுரி தினம் என்ற பெயரில் விழா நேற்று பெங்களூரு டவுன் ஹாலில் நடைபெற்றது. இதில் கவுரி லங்கேஷ் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. ரூ.200 விலை கொண்ட அந்த புத்தகத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கினார்.

இந்த விழாவில் பேசிய சுதந்திர போராட்ட தியாகி துரைசாமி, “நாட்டில் பெரும்பாலான மாநிலங்களை பா.ஜனதா ஆட்சி செய்கிறது. அங்கு வன்முறைகள் அதிகமாக நடக்கின்றன. அதனால் கர்நாடக சட்டசபையில் அந்த கட்சி வெற்றி பெறக்கூடாது. என்னை பொறுத்தவரை நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஆனால் பொது எதிரியான பா.ஜனதா கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது“ என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், “பாசிச குணம் கொண்டவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கீழே இறக்க வேண்டும். 5 ஆண்டு ஆட்சி காலத்திற்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு ஆட்சி கிடைக்கக்கூடாது. கவுரி லங்கேசை கொலை செய்தவர்கள், அதை கொண்டாடியவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டும்“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி எம்.எல்.ஏ., “கர்நாடகத்தில் பா.ஜனதாவை தோற்கடிக்க அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். பா.ஜனதாவை எக்காரணம் கொண்டும் ஆட்சியில் அமர வைக்கக்கூடாது. நான் கர்நாடகத்தில் 3 வாரங்கள் தங்கி இருந்து பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்வேன்“ என்றார்.

Next Story