திருமண கோஷ்டியினர் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது குழந்தைகள் உள்பட 7 பேர் காயம்


திருமண கோஷ்டியினர் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது குழந்தைகள் உள்பட 7 பேர் காயம்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:30 AM IST (Updated: 30 Jan 2018 11:50 PM IST)
t-max-icont-min-icon

ஆறுகாணி அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

அருமனை,

அருமனை அருகே உள்ள அணைமுகத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. பாபநாசத்தில் நடந்த திருமணத்தில் ராஜேசின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியும், உறவினர்களும் அணைமுகம் வந்தனர்.

பின்னர், மணப்பெண் வீட்டார், வீடுகாணும் நிகழ்ச்சிக்காக சீர்வரிசையுடன் ஒரு சொகுசு வேனில் வந்தனர். வேனில், குழந்தைகள் உள்பட பலர் இருந்தனர். ஆறுகாணி அருகே மலைப்பாதையில் வேன் சென்று கொண்டிருந்தது.

 அப்போது, எதிர்பாராத விதமாக வேன் நிலைதடுமாறி மலைப்பாதையில் பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வேன் இரண்டு மரங்களின் இடையே மாட்டிக்கொண்டது.

இதையடுத்து வேனில் இருந்தவர்கள் அலறினர். உடனே, அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து சென்று வேனுக்குள் இருந்தவர்களை மீட்டனர். இதில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

திருமண கோஷ்டியினர் சென்ற வேன் மரங்கள் இடையே சிக்கி கொண்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து ஆறுகாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story