மேலூர் அருகே வயதான தம்பதியை தாக்கி நகை கொள்ளை


மேலூர் அருகே வயதான தம்பதியை தாக்கி நகை கொள்ளை
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே வயதான தம்பதியை தாக்கி 9 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கணபதியாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது 84). இவரது மனைவி சவுந்தர்யா(80). இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். நாராயணன் மனைவியுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீடு ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ளதால் ஆள்நடமாட்டம் எப்போதுமே குறைவாக இருக்கும்.

வயதான தம்பதி தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட ஆசாமிகள் அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த 4 பேர் பின்புறம் வழியாக வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் தூங்கிக்கொண்டிருந்த நாராயணன், சவுந்தர்யாவை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர். பின்னர் நகை-பணம் வீட்டில் இருக்கிறதா என அந்த கும்பல் சல்லடைப்போட்டு தேடியது. ஆனால் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முகமூடி கும்பல், நாராயணனை கத்தியால் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும் சவுந்தர்யாவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story