போக்குவரத்து அதிகாரிகள் சோதனை: தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய 9 ஆட்டோக்கள் பறிமுதல்


போக்குவரத்து அதிகாரிகள் சோதனை: தகுதிச்சான்று இல்லாமல் இயக்கிய 9 ஆட்டோக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 31 Jan 2018 4:15 AM IST (Updated: 31 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் கிழக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தி தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 9 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

சேலம்,

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டத்தில் மாதந்தோறும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் வாகனங்கள் சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி உத்தரவின்பேரில் மண்டல துணை வட்டார போக்குவரத்து ஆணையாளர் பொன்.செந்தில்நாதன் மேற்பார்வையில் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோக்கள் முறையான பெர்மிட் பெற்று இயங்குகிறதா? என்றும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்றும், அதிக பாரம் ஏற்றி செல்லப்படுகிறதா? என்றும் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பதுவைநாதன், குலோத்துங்கன் ஆகியோர் சோதனை செய்தனர்.

9 ஆட்டோக்கள் பறிமுதல்

சேலம் ஆனந்தா இறக்கம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பாரம் ஏற்றி சென்றதாகவும், விதிகளை மீறி வாகனங்களை இயக்கியதும் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. 6 ஆட்டோ ஓட்டுனர்கள் உரிமம் இன்றி இருந்ததும், பேட்ஜ் அணியாமல் இருந்ததும் கண்டறியப்பட்டு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தகுதி சான்று இல்லாமலும், பெர்மிட் இன்றியும் இயக்கப்பட்ட 9 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில ஆட்டோக்களில் சிறிய குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு அதிகாரிகளால் சோதனை அறிக்கையும் வழங்கப்பட்டது. 

Next Story